புயல் செல்லும் திசையையும், கனமழை பெய்யும் இடத்தையும் விளக்கும் படம்.
காற்றழுத்த தாழ்வு நிலையை காட்டும் படம்.
புதுடெல்லி,
சென்னையை நோக்கி வரும் புயல் 2-ந்தேதி கரையை கடக்க இருக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
2-ந்தேதி கரையை கடக்கிறது
சென்னைக்கு தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இது சென்னையில் இருந்து 1,070 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 1,030 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 720 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வடமேற்கு திசையை நோக்கி நகர தொடங்கும்.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும்.
சென்னை நோக்கி வரும் இந்த புயல் 2-ந்தேதி காலை சென்னை-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழைக்கு வாய்ப்பு
இதனால் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் பெரும்பாலான இடங்களில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை (வியாழக்கிழமை), நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மேலும் கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். சில நேரங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
எனவே இன்று இரவு முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். அதே போல் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடலோர பகுதிகள்
சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதே சமயம் திருச்சி, சேலம், கோவை, தர்மபுரி உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.