தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இவ்வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசு தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் எனவும், குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறபித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.