உலகின் முன்னணி துரித உணவு நிறுவனம் மக் டொனால்ட். ஆயிரக்கணக்கான உணவகங்களைக் கொண்டு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள மக் டொனால்ட் இலங்கையிலும் கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர்புரூக் தனக்குக் கீழ் பணிபுரியும் சக பெண் பணியாளருடன் பாலியல் ரீதியான உறவை, அவரது சம்மதத்துடன் கொண்டிருந்தார் என்ற காரணத்திற்காக அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக மக் டொனால்ட் அறிவித்திருக்கிறது.
அவருடைய செயல் தங்கள் நிறுவனத்தின் பணியாளர்களிற்கிடையிலான உறவுகள் பற்றிய கொள்கைகளுக்கு முரணானது என்றும் அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அந்த சக பெண் பணியாளர் இத்தகைய பாலியல் தொடர்புக்கு சம்மதம் அளித்திருந்தாலும் அத்தகைய செயல் ஈஸ்டர்புரூக் தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவே கருதப்படும் என்பதோடு, தங்களின் நிறுவனத்தின் கொள்கைகளுக்கும் முரணானது என்றும் அந்நிறுவனம் கூறியது.
மக் டொனால்ட் நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்திலிருந்தும் ஈஸ்டர்புரூக் பதவி விலகியிருக்கிறார்.
ஈஸ்டர்புரூக்கிற்குப் பதிலாக கிறிஸ் கெம்ஸ்சின்ஸ்கி என்பவர் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் இயக்குநர் வாரியத்திலும் ஓர் உறுப்பினராக நியமனம் பெற்றிருக்கிறார்.