ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 13 டம்மி வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகவலை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
குறித்த டம்மி வேட்பாளர்களில் ஏழு பேர் முக்கியமான ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவும், ஏனைய ஆறு பேர் மற்றொரு முக்கிய வேட்பாளருக்கு ஆதரவாகவும் போட்டியில் இறங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முக்கிய வேட்பாளர்களின் மேடைகளில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுதவிர இந்த வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இரண்டு முக்கிய போட்டியாளர்களுக்கு ஆதரவான தேர்தல் பேரணிகளில் உரையாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்றில் இல்லாதவாறு இந்தமுறை இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதன் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிச்சுமை தேவையின்றி அதிகரித்துள்ளதாக கூறிய அவர், வாக்குச்சீட்டு மிகவும் நீளமானதாக உள்ளதனால் மேலதிகமான வாக்குப் பெட்டிகளை பெற வேண்டியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.