எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை நிபந்தனை இல்லாமல் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசுக்கட்சி அவசரகதியில் எடுத்த முடிவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எதிர்ப்பு நிலையை உருவாக்கியுள்ளது.
பங்காளிக்கட்சிகளிற்குள் கலந்துரையாடாமல் அவசரகதியில் எடுத்த முடிவின் பின்னணி குறித்தும் அந்த கட்சிகளிற்குள் சந்தேகம் எழுந்துள்ளதை அறிய முடிந்தது.
இன்னும் சில தினங்களில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு தமிழ் அரசுக்கட்சி அழைப்பு விடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கேள்விகளை எழுப்ப பங்காளிக்க கட்சிகளின் தலைவர்கள் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ்க் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது.
மேலும் 05 தமிழ்க் கட்சிகள் இணைந்து அண்மையில் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளும் தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பதால் அதனை மீறி இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்திருப்பதே கூட்டமைப்பில் எதிர்ப்பு வர பிரதான காரணமாகவும் காணப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
இந்நிலையில், மீண்டும் அரசாங்கத்திற்கு இவ்வாறு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பிரதானக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்துள்ள நிலையில், அதற்கெதிராக தற்போது எதிர்ப்புக்களும் வலுப்பெற்றுள்ளன.
இந்த நிலையிலேயே வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டத்தின்போது சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவுக்கு முதலாவது எதிர்ப்பை ரெலோ வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஐந்து தமிழ் கட்சிகள் கூடி, பிரதான வேட்பாளர்களை சந்திப்பதென தீர்மானித்திருந்தன.
ஆனால் பிரதான வேட்பாளர்கள் சந்திக்கவில்லை. இதேவேளை, கூட்டமைப்பின் தலைவர்களும் பிரதான வேட்பாளர்களை சந்திக்கவில்லை. தமிழ் அரசு கட்சி மாத்திரமே இரண்டு தரப்புடனும் பேச்சில் ஈடுபட்டிருந்தது.
கடந்தவாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் கூட்டம் நடந்தது. அதற்கு சில நாட்களின் முன்னர் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர்.
இந்த சமயங்களிலெல்லாம் இப்படியொரு முடிவை எடுப்பதென தமிழ் அரசு கட்சி பேசியிருக்கவில்லை.
புளொட் அமைப்பு ஏற்கனவே மத்தியகுழு கூட்டத்தை நடத்தி சஜித்தை ஆதரிப்பதென முடிவெடுத்திருந்தது. எனினும், பங்காளிக்கட்சிகள் கூட்டாக அறிவித்தல்விட வேண்டுமென்பதற்காக அது பற்றி பகிரங்கப்படுத்தாமல் இருந்தது.
ரெலோ, சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவை வழங்குவதற்கு வேட்பாளர்களை சந்திப்பதென திட்டமிட்டிருந்தது. அதற்காக வேட்பாளர்களிடம் நேரம் கோரியிருந்தது.
இந்த நிலையில், கூட்டணிப் பொறுப்புணர்வை மீறி, தன்னிச்சையாக தமிழ் அரசுக்கட்சி முடிவெடுத்தமை பங்காளிகளை அதிருப்தியடைய வைத்துள்ளது.
இப்படியிருக்கையில், தமிழ் மக்கள் தரப்பிலும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வவுனியாவில் நேற்று கூடிய கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நெறுப்பு எடுத்துக் காண்பித்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற முடிவுகள் தற்போது தமிழ் மக்களின் நிலைப்பாட்டிற்கு எதிராக உள்ளதால் அதன் வெளிப்பாடு வெளிவர ஆரம்பித்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.