சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் கொலை வழக்கில் சிக்கிய வெளிநாட்டு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்காவ் மண்டலத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.
வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடான எரித்திரியாவை சேர்ந்த 28 வயது இளைஞர் அதே நாட்டைச் சேர்ந்த 46 வயது நபரை சமையலறை கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
மட்டுமின்றி ஆத்திரமடங்காத அந்த இளைஞர் கல்லாலும் தாக்கியுள்ளார். பின்னர் குற்றுயிராக கிடந்த அந்த நபரை முகாமின் தரைத்தளத்தில் மறைவு செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த 46 வயது நபர் மரணமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் தொடர்புடைய இளைஞரை உடனடியாக கைது செய்துள்ளனர்.
அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், பொறாமை காரணமாகவே தமது நாட்டவரை தாக்கியதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து பல்வேறு பிரிவுகளில் அவர் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
நீதிமன்ற விசாரணையின் முடிவில் அவருக்கு தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.