சென்னையில் புதுமாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தனியார் மருந்து விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த முரளி (28), கௌசல்யா என்கிற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்த விவகாரத்தை தெரிந்துகொண்ட கௌசல்யாவின் பெற்றோர், முரளி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதை காரணம் காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக பதிவு திருமணம் செய்துகொண்டனர். இதனால் பெரும் பிரச்னை ஏற்படவே பொலிஸ் நிலையத்தில் வைத்து சமாதானம் பேசி முடிக்கப்பட்டது.
நாளடைவில் கௌசல்யாவின் தாயாரும் முரளியிடம் நன்றாக பேசி வந்ததால், அனைத்து பிரச்னைகளும் முடிந்துவிட்டதாக இருவரும் நினைத்துள்ளனர்.
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், தனியாக பேச வேண்டும் எனக்கூறி முரளியை அழைத்து சென்றுள்ளார். பேசிக்கொண்டிருந்த போதே திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக உயிருக்கு போராடிய முரளியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள்ளாகவே அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.