முள்ளியவாய்காலில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட காரணமான வேட்பாளரை பெரமுன களமிறக்கியுள்ளது. எனவே வடக்கு, கிழக்கில் மக்கள் புரிந்து வாக்களிக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா நகரப்பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற ஜனநாயக தேசிய முன்னணியின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயக தேசிய முன்னனி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலானி சஜித் பிரேமதாச, கொழும்பு மாநாகசபை மேயர் றோசி சேனநாயக்க, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் றிசாட் பதியுதீனின் இணைப்பாளருமான றிப்கான் பதியுதீன், மகளிர் அமைப்புக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன்,
வடக்கு மாகாணத்தில் உள்ள மகளிரில் 99 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகையால் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆனதும் வடக்கு, கிழக்கில் இருக்கும் மகளிரை முன்னேற்றப் போகிறார். ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடக்கு, கிழக்கு மாகாணம் 30 வருடம் யுத்தத்தை எதிர்கொண்ட மாகாணம். எமது பெண்கள் இறுதி யுத்தத்தின் போது தமது உறவுகள், உடமைகள் எல்லாவற்றையும் இழந்து மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். இது சர்வதேசம் அறிந்த உண்மை. எமது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பெண்களுக்காக நிதிகளை ஒதுக்கியது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறக்கப்பட்ட போதும் அவர்களுக்கான தீர்வு என்னும் கிடைக்கவில்லை.
காணாமல் போனோர் தொடர்பில் அடுத்து வரும் 5வருடத்திற்குள் முடிவு காண வேண்டும் என எங்களுடைய சஜித் பிரேமதாச அவர்களிடம் நாம் வலியுறுத்திக் கூறி வருகின்றோம். பெண்களுக்கான வாழ்வாதாரம், வீட்டுத்திட்டம், நுண்கடன் திட்டம் என்பன தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். இவற்றுக்கான நிதி எமது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை நூற்றுக்கு நூறு வீதம் வழங்க வேண்டும்.
வடக்கு, கிழக்கில் 90 ஆயிரம் குடும்பங்கள் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களாக காணப்படுகின்றனர். கணவனால் கைவிடப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. படித்து பல பெண்கள் வேலைக்கு அலைவதை காணக்கூடியதாகவுள்ளது. பெண்களுக்கான கைத்தொழில் பேட்டைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு பிரதேச செயலங்களிலும் கைத்தொழில் பேட்டைகள் ஆரம்பிக்கப்படும்.
முள்ளியவாய்காலில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வேட்பாளரை தான் அடுத்த கட்சியில் களமிறக்கியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் இருக்கிறது. எமது மக்கள் அவரால் ஏதோவொரு வித்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடைசி வெள்ளைவானால் என்றாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஆகவே எங்களுடைய வாக்கினை நாம் சரியாக பயன்படுத்தி முழுமையாக வடக்கு, கிழக்கில் ஐக்கிய தேசிய முன்னனியின் வேட்பாளருக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.