‘அபி ஸ்ரீலங்கா’ என்ற பெயரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிகா குமாரதுங்கவும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது.
சுகததாச உள்ளரங்கில் இன்று நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, கட்சி அமைப்பாளர்களுக்கு குமார வெல்கம அழைப்பு விடுத்திருந்தார்.
இதில் பெருமளவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ள நிலையில், அந்த முடிவினால் அதிருப்தியடைந்துள்ள கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த மாநாட்டைக் கூட்டியுள்ளனர்.
இதில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது என்றும் இதில் பங்கேற்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, அபி ஸ்ரீலங்கா என்ற பெயரில் சந்திரிகா ஆரம்பித்துள்ள அமைப்பு ஏற்கனவே, புதிய ஜனநாயக முன்னணியுடன் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.