நபி முஹம்மது (ஸல்) அவர்களின் அன்பு மனைவி கதீஜா (ரலி) மற்றும் பெரிய தந்தை அபூதாலிப் இருவரின் மங்களும் தந்த அதிர்ச்சியாலும் துக்கத்தாலும் துவண்டு போயிருந்த நபிகளாருக்கு ஆதரவுக் கரம் நீட்டினார் அபூலஹப். ஆனால் அதில் நயவஞ்சகமும் ஒளிந்தே இருந்தது. ஹம்ஸா (ரலி) மற்றும் உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்றுச் சில ஆண்டுகள் கடந்த பிறகும் கூட குறிப்பிடத்தகுந்தவர்கள் எவரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அபூலஹப் தனக்கு ஆதரவாக இருப்பதாக நம்பி நபிகளார் ஏகத்துவத்தைப் பிரகடனப்படுத்தினார்.
குறைஷிகள் அபூலஹபுக்குப் பயந்து அமைதி காத்தனர். குறைஷிகளின் தூண்டுதலின் பெயரில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடம் “உனது தந்தை அப்துல்லாஹ்வின் தந்தை அப்துல் முத்தலிப் சொர்க்கத்திற்குச் செல்வாரா அல்லது நரகத்திற்குப் போவாரா?” என்று தயங்கியபடி கேட்டான் அபூலஹப். நபிகளார் சிறிதும் தயங்காமல் “அவரும் அவருடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களும் நரகத்திற்குதான் போவார்கள்” என்று சொல்லி தாமதிக்கும் முன்னர் அபூலஹப், “இனி நீதான் என் ஜென்ம விரோதி, இனி நான் உனக்குப் பாதுகாவலன் இல்லை” என்று கூறினான். அபூலஹபுக்கும் நபிகளாருக்கும் இடையில் விழுந்த விரிசல் குறித்துக் குறைஷிகளுக்குக் கொண்டாட்டமாக இருந்தது. குறைஷிகள் வழக்கம்போல் கொடுமையாகவும் மிகக் கடுமையாகவும் நபிகளாரிடம் நடந்து கொண்டனர்.
மக்காவில் இஸ்லாத்தை யாரும் ஏற்காத நிலையில் புதிய இடம், புதிய முகங்கள் என்று முயன்று பார்க்கலாமென்று நபிகள் பெருமானார் மக்காவிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் தாஃயிபிற்குப் பயணப்பட்டார்கள். அவர்களுடன் ஸைத் இப்னு ஹரித்தாவும் உடன் சென்றார்.
மக்காவில் குறைஷியினர் உயர் குலத்தவர்கள், அதேபோல் தாயிஃபில் ஸகீஃப் கூட்டத்தினருக்குப் பெரும் மதிப்பு இருந்தது. ஸகீஃப் கூட்டத்தின் தலைவர் அம்ர் இப்னு உமைர் அவர்களைச் சந்தித்தார்கள். அவரோ, தமது மகன்களைச் சந்திக்கும்படி சொல்லி அனுப்பிவிட்டார். அவரின் மகன்களான அப்து ஜலீல், மஸ்வூத் மற்றும் ஹபீப் மூவரையும் சந்தித்த நபிகள் நாயகம் (ஸல்), தான் முஹம்மத் என்றும் மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். இஸ்லாத்தை பரப்புவதற்கு உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்கள்.
இதைக் கேட்ட இறைமறுப்பாளர்கள் வாய்விட்டுக் குரலுயர்த்திச் சிரித்தனர். அவர்களில் ஒருவன் “கடவுள் இவரை இறைத்தூதராகத் தேர்ந்தெடுத்திருந்தால், நான் கஅபாவுடைய திரையையே கிழித்து எறிந்துவிடுவேன்” என்று ஏளனம் செய்தான். இன்னொருவன் மிகவும் குத்தலான தொனியில் “கடவுளுக்கு இறைத்தூதராக்குவதற்கு உன்னைத் தவிர வேறு ஆளே கிடைக்கவில்லையா?” என்று எள்ளளுடன் பேசினான். மூன்றாமவன், “நீர் கடவுளின் தூதராக இருந்தால் நான் உன்னிடம் பேச முடியாது, நான் தகுதியற்றவன்.
மாறாக நீர் சொல்வது பொய்யென்றால் என்னுடன் பேசவும் நீ தகுதி பெறமாட்டாய்” என்று நபிகளாரை அவமதித்தான். சொற்களால் காயப்பட்ட நபிகளார் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் “இது உங்களின் முடிவென்றால் அது உங்களோடே இருந்துவிட்டு போகட்டும். நான் உங்களைச் சந்தித்ததையோ பேசினதையோ நீங்கள் மற்றவர்களிடம் சொல்லி அவர்கள் மனதையும் கெடுக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்கள். அவ்வளவு அவமானப்படுத்தியும் இப்படியொரு மென்மையான கோரிக்கையை நபிகளார் முன் வைத்ததைக் கண்டு அவர்கள் வியந்தனர்.
தலைவர்கள் அவமதித்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கையில் அங்கிருந்து மற்ற தலைவர்களைச் சந்திக்கப் புறப்பட்டார்கள் நபி முஹம்மது (ஸல்).
(ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், ரஹீக் அல்மக்தூம்)
ஜெஸிலா பானு.