யாழ்.மாநகர எல்லைக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாரியளவிலான விளம்பர பலகைகளுக்கான கட்டணங்களை மாநகரசபை நிர்வாகம் அறிவிடாமலிருப்பது தொடர்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் பிரேரணை சமர்ப்பித்திருந்தார்.
யாழ் மாநகரசபையின் இன்றைய கூட்ட அமர்வின்போது இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த பிரேரணையில்,
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் மத்திய பஸ் தரிப்பிடத்தில் 12, கஸ்தூரியார் வீதியில் 10, நாவலர் வீதியில் 06, பிரதான வீதியில் 23, பலாலி வீதியில் 17, ஸ்ரான்லி வீதியில் 13, கே.கே.எஸ் வீதியில் 03 உட்பட மொத்தமாக 95 விளம்பர பலகைகள் காணப்படுகின்றன. அதில் 35 விளம்பர பலகைகளுக்கான ஒரு வருடத்தற்குரிய கட்டணமான 2,264,104.00 ரூபா இது வரை செலுத்தப்பட வில்லை.
இதில் அன்றா நிறுவனத்தினுடைய 28 விளம்பர பலகைகளுக்குரிய 2,093,787.45 இன்னும் செலுத்தப்படவில்லை. இவ் 28 விளம்பர பலகைகளுக்குள் 2018 ஆம் ஆண்டுக்குரிய 5 விளம்பர பலகைக்கான கட்டணங்களும் உள்ளன. அத்துடன் ஒரு விளம்பர பலகையின் ஒரு வருடத்திற்குரிய ஒப்பந்த காலம் இம்மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையிலும் அதற்கான கட்டணமும் அறிவிடப்படவில்லை.
ஒரு சாதாரண வியாபார ஸ்தானபத்திரிக்குரிய வரியான 6000 ரூபாவினை செலுத்த தவறும் பட்சத்தில் வியாபார ஸ்தாபன உரிமையாளருக்கு கடிதங்கள் அனுப்பி பின்னர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து அதனை அறவிடுகின்ற யாழ்.மாநகர சபை 22 இலட்சத்து 64 ஆயிரத்து 104 ரூபாவினை கடந்த பல மாதங்களாக ஏன் ஒரு வருடமாக அறிவிடாமல் இருப்பது ஏன்? எனவே குறித்த கட்டணங்களை உடனடியாக அறவிடுவதற்கு நடடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.