தமிழகத்தில் கள்ளக்காதலை கைவிட மறுத்த நபரை அவரது மனைவி, மகனே கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
கரூரின் குப்பம்- வேலம்பாளையம் செல்லும் வழியில் கார் ஒன்று எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்தது.
இதனை பார்த்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் காரின் பின்பக்க இருக்கையில் நபர் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்துள்ளது.
இவரை யாரும் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இறந்துகிடந்தவர், நொய்யல் குறுக்கு சாலையை சேர்ந்த ரெங்கசாமி என்பதும், அந்த ஏரியாவில் பல தொழில்களை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரின் மனைவி கவிதா, மற்றும் மகன் அஸ்வின்குமாரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் விசாரணையில் தெளிவான பதில்கள் இல்லாததால் சந்தேகமடைந்த பொலிசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், ரெங்கசாமிக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரை கவிதா மற்றும் அஸ்வின்குமார் இருவரும் சேர்ந்து வீட்டிலேயே வைத்து கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் உடலை காரில் எடுத்து சென்று தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
இதையடுத்து கவிதா மற்றும் அஸ்வின்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அரசு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு ரெங்கசாமியின் உடலை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தந்தையை கொன்றது குறித்து அஸ்வின்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் கரூரில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறேன்.
என் தந்தைக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது, இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது.
கடந்த 4ம் திகதி என் தந்தை அந்த பெண்ணுடன் இருப்பதை நேரில் பார்த்த எனக்க கடும் கோபம் ஏற்பட்டது.
மறுநாள் குடித்துவிட்டு வந்த என் தந்தைக்கும், தாய்க்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது, என் தாயை அடித்ததால் ஆத்திரத்தில் என் தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.
பின்னர் நான், என் தாயும் சேர்ந்து கொலையை மறைக்க காரில் சடலத்தை ஏற்றிக்கொண்டு சென்றோம்.
அந்த வழியில் சென்றபோது, கார் பள்ளத்தில் சிக்கியதால் என்னசெய்வதென்று தெரியாமல், காருக்கு தீவைத்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.