நெருங்கிய உறவினர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்த பாதிப்பால் உடலுறுப்பு தானம் குறித்து 19 வயது பெண் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்தியாவை சேர்ந்த 19 வயதாகும் இளம்பெண் ராதிகா ஜோஷி. இவருடைய நெருங்கிய உறவினர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பேர் மாற்று உடல் உறுப்புகள் கிடைக்காததால் இறந்து போகிறார்கள் என்ற உண்மை அவருக்கு தெரிய வந்திருக்கிறது.
10 லட்சம் பேரில் 0.86 சதவீதம் பேரே தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அமைப்பு ஒன்றை உருவாக்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார், ராதிகா ஜோஷி.
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. இது பற்றி விரிவாக விவாதிக்கப்படாததால் ஒருசிலரே தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கிறார்கள்.
மேலும் இந்தியாவில் சில மருத்துவமனைகள் தான் உடல் உறுப்புகளை பிரித்தெடுத்து நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுதி வாய்ந்தவையாக இருக்கின்றன என்கிறார் ராதிகா.
இவரது அமைப்பில் 6 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தெரு நாடகங்கள், ஓவியங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் வழியே பொதுமக்களிடம் உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.