நடுவானில் இயந்திர கோளாறு காரணமாக பாரிஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானத்தின் இயந்திர பாகங்கள் சிலவற்றை தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் இணையதளம் ஒன்று குறித்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.
சுமார் 200 தன்னார்வலர்களும் பல்வேறு நிபுணர்களும் இணைந்து அக்டோபர் மாதம் தொடங்கி பிரான்ஸ் நாட்டின் Perrigny-sur-Armançon பகுதியில் தீவிரமாக தேடுதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே சுவிஸ் விமானத்தின் 3 இயந்திர பாகங்களை கண்டெடுத்துள்ளனர். டைட்டானியத்தால் ஆன இந்த விமான பாகங்களானது சுமார் 30 செ.மீ நீளம் கொண்டது என கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 25 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு Airbus A220 சுவிஸ் விமானமானது 116 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் நடுவானில் விமானத்தின் இயந்திரம் கோளாறானது விமானிகளுக்கு தெரியவரவே,
உடனடியாக கோளாறான இயந்திரத்தை நிறுத்திவிட்டு, அவசர அவசரமாக பாரிஸ் நகரில் அமைந்துள்ள Charles de Gaulle சர்வதேச விமான நிலையத்தில் அந்த சுவிஸ் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.
116 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து, உடைந்து விழுந்த இயந்திர பாகங்களை மீட்டுத் தருமாறு அதிகாரிகள் தரப்பு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்தே 200 தன்னார்வலர்கள் இந்த விவகாரம் தொடர்பில் களத்தில் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.