தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பான பிரதான சாட்சியாளருக்கு சிறையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ள பிரதிவிராஜ் மானம்பேரி என்ற முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலையுடன் கருணா அம்மான் தரப்பிற்கு தொடர்புண்டு என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனவே கருணா தரப்பினால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரச தரப்பு சாட்சியாளர் பிரதிவிராஜிற்கு, கருணா தரப்பினால் சிறையில் ஆபத்து ஏற்படக் கூடும் என அவரது சட்டத்தரணி தர்சன ரன்முத்துகல நீதிமன்றில் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரதிவிராஜிற்கு சிறையில் தனியறை வழங்குமாறு நேற்று உத்தரவிட்டுள்ளது.
ரவிராஜ் கொலை, கருணா தரப்பின் தேவைக்காக மேற்கொள்ளப்பட்டதாக பிரதிவிராஜ் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இந்தக் கொலையின் சந்தேக நபர்களில் ஒருவராக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரதிவிராஜ் பின்னர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினமும் பிரதிவிராஜிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.