வடக்கு , கிழக்கு வாக்குகளில் 90 வீதமான வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கே கிடைக்கும் என்பதால் அவர் வெற்றி பெறுவது உறுதி என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அக்குரணை அரபா மண்டபத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் நாம் இருக்கின்றோம். நாளுக்கு நாள் சஜித் பிரேமதாசவுடன் இணையும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்பதே தேர்தல் பிரசாரங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.
தெற்கில் சிங்கள வாக்குகள் இரண்டு தரப்பிற்கும் சரிசமமான அளவில் இருக்கின்றது. அடுத்த இரண்டு தினங்களில் தெற்கிலும் சஜித்தின் வாக்கு வீதம் அதிகரிக்கும்.
வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் சஜித்திற்கே கிடைக்கும். இதனடிப்படையில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை.
52 அரசியல் சூழ்ச்சி நடந்த நேரத்திலேயே சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என நான் நினைத்தேன்.
அப்போது நாங்கள் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தும் போது சஜித் மேடைக்கு வரும் சந்தர்ப்பங்களில் பெரியளவில் மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தினர் என்பதே இதற்கு காரணம். இது குறித்து நான் கட்சியின் தலைமையிடம் பேசினேன். எனினும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்குவது நாளுக்கு நாள் தள்ளிப் போனது. இறுதியில் அவருக்கு வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை வழங்க நேரிட்டது.
தேர்தல் வெற்றி தொடர்பாக எமக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனினும் நாம் அனைவரும் இந்த குறுகிய காலத்தில் மேலும் வாக்குகளை திரட்ட வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.