எயிட்ஸ் நோய் என்பது எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ் மிக வேகமாக எமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயலற்றதாய் ஆக்கும் ஒரு நோய் ஊக்கி நோயாகும். உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலம் செயலற்று விட்டால் பல உயிர் கொல்லி நோய்கள் தொற்றி எம்மை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விடுகின்றன.
எயிட்ஸ் நோயை உண்டாக்கும் மிக நுண்மையான எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ் உடலிலுள்ள ஒரு கலத்துக்குள் நுழைந்து பின்னர் அவை பலமடையும் வரை பெருகுவதில்லை. பலமடைந்து பெருக ஆரம்பித்ததும் மிக வேகமாக செயல்படுகின்றது.
எயிட்ஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்ட 1982ஆம் ஆண்டிலுருந்து இதுவரை சுமார் இருபத்தைந்து மில்லியன் பேர் இறந்துள்ளதுடன் சுமார் 33 மில்லியன் மக்கள் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். எனினும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
உடலில் உள்ள படர் ஜவ்வுப் படலமோ அல்லது இரத்தமோ, நோய் தொற்றிய இரத்தம், விந்து, யோனிமடற் கழிவு, முன்விந்துத்திரவம் அல்லது தாய்ப்பால் போன்ற உடல்திரவங்களோடு நேரடி தொடர்பு கொள்ளும்போது எச்ஐவி வைரஸ் தொற்றுகிறது.
மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆபிரிக்காவில் எச்ஐவி தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது. தற்பொழுது எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டு வந்தாலும் இந்நோய் வெகு வேகமாக பரவும் தன்மைகொண்டதனால்; அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுவதே சாலச்சிறந்தது.
இலங்கையில் மூவாயிரம் எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாக அறிவித்துள்ள எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவினர் எயிட்ஸ் நோய்த் தாக்கத்து உள்ளானவர்கள் பல்வேறு பால்வினை நோய்களுடன் நாட்டின் பல பாகங்களிலும் பரவியுள்ளதால் இந்த நோய் ஏனையவர்களையும் மிக இலகுவாகத் தாக்கும் அபாயம் இருப்பதாக விடுத்துள்ள எச்சரிக்கை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இலங்கையில் முதலாவது எயிட்ஸ் நோயாளி 1987 ஆம் ஆண்டே இனங்காணப்பட்டார். அன்றிலிருந்து இதுவரையில் 1350 பேர் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதால் அவர்கள் மூலம் எயிட்ஸ் பரவுவதற்கான அபாயம் தடுக்கப்பட்டுள்ள போதும் ஏனையவர்களை இனங்காண்பதில் ஏற்பட்டுள்ள சவால்கள், சிக்கல்களினால் எயிட்ஸ் நோய் மேலும் பரவும் அபாயத்தை முற்றாகத் தடுக்க முடியாதுள்ளதாகவும் எயிட்ஸ் நோய்க்கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எயிட்ஸ் நோய் உள்ளவர்களென இனங்காணப்பட்டவர்களில் 350 பேரின் நிலைமையே மிக மோசமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் 520 பேர் பெண்களாகவுள்ளனர். இவர்களினூடாக 46 குழந்தைகளுக்கும் எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகி மிகமோசமான நிலையில் இருப்பவர்களில் 104 பேர் பெண்களாகவுள்ளனர்.
இலங்கையின் மேல் மாகாணத்திலேயே எயிட்ஸ் நோய் வேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகின்றது. இம் மாகாணத்தில் தினமும் ஒருவர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
மேல் மாகாணத்தில் அபிவிருத்தியென்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுவரும் சில நடவடிக்கைகளினாலேயே எயிட்ஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
விபசாரம், சிறுவர் பாலியல் வர்த்தகம், சூதாட்ட விடுதிகள் போன்றவற்றின் மூலமே இந் நோய் பரவும் அபாயம் அதிகரிதுள்ளதாக நம்பப்படுகின்றது.
பெண் பாலியல் தொழிலாளர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், போதைவஸ்துப் பாவனையாளர்கள், கடற்கரையோரச் சிறுவர்கள், சிறைக் கைதிகள் போன்றோரே அதிகளவில் எயிட்ஸ் தாக்கத்துக்குட்படுவதாக எயிட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரையில் மருந்துவர் தட்டுப்பாடு, மருத்துகள் பற்றாக்குறை, மருந்துகள் இறக்குமதி, உற்பத்திகளில் மோசடிகள், வைத்தியசாலைகளுக்கு மூடு விழாவென சுகாதாரத்துறை பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. எமது நாட்டின் சுகாதாரத்துறைக்கு சவால் விடுவது போன்றே டெங்குக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல், எயிட்ஸ் என கொடிய தொற்றுநோய்களும் போர் தொடுக்கின்றன.
எனவே எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண்பது, அவர்களை உடனடி சிகிச்சைக்குட்படுத்துவது தொடர்பிலான நடவடிக்கைகள் முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு செயற்றிட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களை உசார்படுத்தி இக்கொடிய நோயின் தாக்கத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இன்னும் சில வருடங்களில் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்ந்து விடுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும்.
எயிட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. கிருமி தாக்கத்திற்கு உள்ளாகும் நோயாளிகள் இலகுவில் எயிட்ஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகினாலும், வெகு சிலர் எச்.ஐ.வி. கிருமித்தாக்கத்திற்கு உள்ளாகியும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகாது இருக்கிறார்கள். இவ்வாறு எச்.ஐ.வி.தாக்கத்திற்குள்ளாகியும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்திற்குள்ளாகாது இருப்பதற்கு அவர்களின் மரபணுக் கட்டமைப்பே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
எச். ஐ. வி. கிருமியை எதிர்க்கும் மரபணுக் கட்டமைப்புள்ளோரின் நோயெதிர்ப்பு சக்தியின் வீரியமிக்க செயற்பாடே இந்த மாற்த்திற்கு காரணம் எனக் கருதப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் 33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை ஆண்டு தோறும் 2 மில்லியன் மக்கள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர். இது தவிர வருடாந்தம் 2.7 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயாளர்களாகப் புதிதாக இனங்காணப்படுகின்றனர்.
எயிட்ஸ் நோய் எவ்வாறு தோன்றியது? என்ற கேள்வி பல்வேறு ஊகங்களைத் தாண்டி இப்பொழுது ஆப்பிரிக்காவில் போலியோ போன்ற நோய்களைத் தடுக்க புதிய கண்டுபிடிப்பாகக் கண்டறிந்த தடுப்பூசியொன்றே, எய்ட்சுக்கான மூலகாரணம் என்பது இரகசியமாக அம்பலமாகியுள்ளது.
1950-களின் இறுதியில் ஆப்பிரிக்காவில் கோடிக்கணக்கான மக்கள் மீது பரிசோதனையாக நோய் எதிர்ப்பு மருந்து என்று கூறி, எந்தவிதமான முன் பரிசோதனையுமின்றி ஏற்றிய தடுப்பூசிதான், எய்ட்சின் மூலமாகியது என்று தெரிய வருகின்றது.
சில ஆப்பிரிக்க நாடுகளில் 16 முதல் 18 சதவீதம் வரை எயிட்ஸ் பரவியுள்ளது. இது இளம் பெண்களை அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளதால், இந்நாடுகளில் பிறக்கும் மூன்றில் ஒரு குழந்தை எயிட்ஸ் நோயுடன் பிறக்கின்றது. அத்துடன் தாய்ப்பால் ஊட்டும் 10 பெண்களில் 2 அல்லது 3 பேர் ஹெச்.ஐ.வி.யால் (H.I.V.) பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தாய்ப்பாலூடாக 7 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற வீதத்தில் குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. பரவுகின்றது.
பாலியல் உறவு மூலம் தொற்றும் எயிட்ஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக அதன் வீரியத்தைக் குறைக்கும் மருந்துகள் மூலம் மரணத்தைத் தள்ளிப்போட முடிகின்றது. இவை கூட மேற்கு மக்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக உள்ளது. பாலியல் ரீதியான எயிட்ஸ் தொற்றைத் தடுப்பதுக்குப் பாதுகாப்பாக ஆண் உறை பாவிப்பது (பயன்படுத்துவது) நோய்த் தடுப்பாக உள்ளது.
இது போல் இரத்தப் பரிசோதனை, ஊசியை மறுதரம் பாவியாமை (பயன்படுத்தாமை), சவரக் கத்தியை மறுதரம் பாவியாமை (பயன்படுத்தாமை) போன்ற தடுப்பு வகைகள் எல்லாம் மேற்கில் சாத்தியமானதாக உள்ளது. வறுமையான நாடுகளில் இது சாத்தியமற்ற நிலைமையை ஏற்படுத்தி எயிட்ஸ்க்குப் பலியாக்குகின்றது.
எயிட்ஸ் தொற்றும் வழிகளில் ஓரினச்சேர்க்கை முக்கியமான ஒரு பாலியல் தொடர்பு வழியாக உள்ளது. இது போல் விபச்சாரம் மற்றொரு வழியாகும். இவை இரண்டும் இயற்கையான பாலியல் தெரிவுகளுக்கு விரோதமான பக்கவிளைவுகளாகும்.
பொதுவாகச் சமுதாயத்தில் நிலவும் ஒருதாரமணத்தைப் பெண் கடைப்பிடிக்கின்றாள், ஆண் பலதார மணத்தைப் பலவடிவில் கையாளுவதால் ஆண் எயிட்ஸ் நோயாளியாகின்றான். ஆண் காவிச் செல்லும் இந்த நோய்க்கூறு சொந்த மனைவிக்குக் கொடுக்கின்றான். ஆண் இடத்துக்கு இடம் காவுபவனாக இருக்க பெண் கொடுப்பவளாக உள்ளாள். குடும்பப் பெண்களின் கணவன்மார் அப்பெண்ணை விட்டு வேறு பெண்ணுடன் தொடர்பு கொள்வதையும், பெண் வேறு உறவை வைத்திருப்பதாலும் இந் நோய் எம்முள் பரவுகின்றது.
இலங்கையில் எயிட்ஸ் நோய் தொற்றியவர்களின் வயது மற்றும் பால் நிலையில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டள்ளனர். 2009 ஆம் ஆண்டின் தகவல்களின் படி 35 தொடக்கம் 39 வயதுப்பிரிவினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரிவில் 130 ஆண்களும் 103 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 30-34 வயதுப்பிரிவில் 121 ஆண்களும் 108 பெண்களும், 40-44 வயதுப்பிரிவில் 117 ஆண்களும் 70 பெண்களும் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.
50 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 77 ஆண்களும் 37 பெண்களும் எயிட்ஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பதுவம் குறிப்பிடத்தக்கது. 2009 ம் ஆண்டு இலங்கையில் 707 ஆண்களும் 489 பெண்களும் அடங்கலாக மொத்தமாக 1196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எயிட்ஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 216 என அறிக்கைகள் தெரிவிக்கின்ற அதேவேளை 2009ஆம் ஆண்டு 397374 பேர் எச் ஐ வி தொற்று தொடர்பாக பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
வவுனியா மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு 1052 பேர் பரிசோதணைக்குட்படுத்தபட்ட நிலையில் ஒருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டு இறந்துள்ளார். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு 555 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ள அதேவேளை நோய் தொற்றுள்ளவர்களாக இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.
கடந்த காலங்களில் இலங்கையில் வயது வந்தோர் பாதிக்கப்பட்டுள்ள வீதம் 0.1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளது என்றாலும் அதிகரித்து வரும் நாகரீக வாழ்க்கை முறைக்கு ஏற்ப எயிட்ஸ் நோய்த்தாக்கமும் நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களின் எல்லைகளையும் தொட்டுச்சென்றுள்ளது. இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிக்கப்பட்டும் , சுமார் 200 பேர் வரை மரணித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்.ஐ.வி எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பொதுவான கொள்கைத் திட்டமொன்று இல்லாத போதிலும் இலங்கையில் 2002-2006 காலப்பகுதியில் எச்.ஐ.வி க்கான தந்திரோபாயத் திட்டமொன்று வகுக்கப்பட்டிருந்தது. எச்.ஐ.வி தந்தரோபாயத் திட்டம் தடுப்புமுறை, நலன்பேணல், நோயாளர்களை அடையாளம் காணுதல போன்ற 3 தொழில் நுட்பப்பிரிவுகளை கொண்டு செயற்பட்டு வந்துள்ளதுடன் சுகாதார அமைச்சு காலத்தின் தேவைக்கேற்ப சுமார் 3 வருடங்களுக்கொரு முறை தனது தந்திரோபாயத் திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தி வருகின்றமை விசேட அம்சமாகும்.
இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்று உள்ள சுமார் 89 உறுப்பினர்கள் இணைந்து லங்கா பிளஸ் என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளதுடன். அவ்அமைப்பு மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உடல், உளவியல் செயற்பாடுகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகிலாவிய ரீதியில் மிக உருக்கமாக அனுஸ்டிக்கப்படும் எயிட்ஸ் இன்று தேசம் கடந்து நாடு கடந்து சுமார் 33 மில்லியன் மக்களை ஆட்கொண்டுள்ளது. இதேவேளை 2009 ஆம் ஆண்டு புதிதாக 2.6 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளிவந்துள்ள நிலையில் 1.8 மில்லியன் மக்கள் இது வரை உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடங்களை விடவும் குறிப்பாக தென் ஆபிரிக்கா, சம்பியா, சிம்பாவே மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் எயிட்ஸ் நோய் பரவும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .
இந் நோய் பரவுவதற்கு மக்களின் அறியாமையும் அசட்டுத் தன்மையும் காரணமாக மைவதால் விழிப்புணர்ச்சி மூலம் மக்களை விளிதெளச் செய்தல் அவசியமாகின்றது.
எவரை எயிட்ஸ் நோய் தாக்கும்? பாதுகாப்பாக இருங்கள்
எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக்கூடும்.
ஆனால் கீழ்க் கண்டவர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.
கொனரியா (Gonorrohoea), சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும்,
பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும். பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கு,
விபசாரிகளுக்கு(ஆண்/பெண்) கிருமிநீக்கம் செய்யப்படாத ஊசிகள் ஏற்றப்பெறும் நோயாளிகளுக்கு, போதை மருந்துகளை ஊசிமூலம் ஏற்றுபவர்களுக்கு,
அறியாதவரிடம் இருந்து பெற்ற இரத்தத்தைப் பெறும் நோயாளிக்கு. இத்தகையவர்களில் ஒருவர் ஆகாமல் இருக்க நீங்கள் திடசங்கற்பம் கொள்ளுங்கள்
எயிட்ஸ் கிருமி தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால்?
ஒருவர் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸ் தொற்றுவதற்கான ஏதாவது ஒரு செய்கையில் ஈடுபட்டிருக்கலாம்; அல்லது தனக்கோ, அல்லது அறிந்தவருக்கோ எயிட்ஸ் நோய் கிருமி தொற்றியதால் ஏற்படும் அறிகுறிகளை அவதானித்திருக்கலாம்.
இந்தச் சூழ்நிலையில் உடனடியாகச் செய்ய வேண்டியவை எவை?
உடனடியாக உங்கள் குடும்ப வைத்தியரிடமோ, சுகாதார வைத்திய அதிகாரியிடமோ (M.O.H.) ஏனைய அரசாங்க வைத்தியரிடமோ சென்று ஆலோசனை பெறுங்கள். சொல்ல வேண்டியவற்றை மறைக்காது விபரமாகச் சொல்லுங்கள்.
தனக்கு வெளியிடப்பட்ட ஒருவரது இரகசியங்களை, மற்றவர்களுக்குப் பரப்பாது இரகசியம் காப்பது வைத்தியர்களின் தொழில் தார்மீகமாகும். எனவே எதையுமே மறைக்காமல் சொல்லலாம். வெட்கப்பட வேண்டியதும் இல்லை.
மீண்டும் கிருமி தொற்றுவதற்கு ஏதுவான செய்கைகளில் ஈடுபடாதீர்கள்,
உங்களிலிருந்து மற்றவர்களுக்குக் கிருமி பரவக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்,
உடலுறவில் ஈடுபடாதீர்கள்
உடலுறவு வைத்தால், கருத்தடை உறைகளை (Condoms) கட்டாயம் உபயோகியுங்கள்,
உங்கள் உடற் திரவங்களால் அழுக்கடைந்த உங்கள் ஆடைகளை நீங்களே துவையுங்கள்
இரத்ததானம் செய்ய முற்படாதீர்கள்
வேறு எந்த நோய்கள் உங்களுக்கு உண்டானாலும் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுங்கள். அப்பொழுது உங்களுக்கு நோய் தொற்றியிருக்கும் விஷயத்தை மறக்காமல் சொல்லுங்கள்.
சமுதாயப் பொறுப்புள்ள ஒருவனாக நடந்து கொள்ளுங்கள்.