ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் அமைந்துள்ள ஆனந்த சுதாகரனின் இல்லத்திற்கு நேற்று சென்று பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பகுதிகளில் அதிகளவான அரசியல் கைதிகள் இன்றும் உள்ளனர். அதேபோன்று தெற்கிலும் படை வீரர்கள் இன்றும் கைதிகளாக இருக்கின்றார்கள்.
அவர்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களாக இன்றும் சிறைகளில் வாழ்கின்றனர். அவர்கள் குற்றம் இளைக்கப்படாத நிலையில் வாழ்கின்றனர்.அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது.
ஒரே நாடு என்ற அடிப்படையில் இனமத பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.
ஆனந்த சுதாகரனின் மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சுயநலனிற்காகவே வாழ்கின்றனர். அவர்கள் இவர்களின் குடும்பங்களையோ, இவர்களின் கல்விக்கோ உதவுவதில்லை. தமது தேவைகள், சுயநலத்திற்காகவே வாழ்கின்றனர்.
இவ்வாறான குடும்பங்கள் இன்றும் பல்வேறு சிரமங்களில் வாழும் குடும்பங்கள் இன்றும் வாழ்கின்றனர். இவ்வாறான குடும்பங்களிற்கு புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் உதவ வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் மௌனமாக உள்ளனர். நான் ஒரு சிங்கள இனத்தவராக இவர்களின் பிரச்சினையை தேடிப்பார்த்து அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வந்துள்ளேன்.
ஆனந்த சுதாகரன் தமக்கு கிடைத்த தண்டனை தொடர்பில் மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியாத நிலை காணப்பட்டுள்ளது.
ஆனந்த சுதாகரன் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை மீளப் பெறப்பட்டிருந்தால் அவரை விடுதலை செய்திருக்க முடியும். அதனால் தான் அவரது விடுதலை தாமதமாகியுள்ளது.
அடுத்த அரசாங்கத்தில் கோத்தபாய ராஜபக்ச பொறுப்பேற்றதன் பின்னர் அரசியல் பேதமின்றி இவ்விடயம் தொடர்பில் நல்லதொரு முடிவு எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.