மதங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்தல் வருந்தத்தக்க செயலாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
புனிதமான நாளான பௌர்ணமி தினமான நேற்றைய தினம் விஹாரைகளில் தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக நடைபெறும் மத வழிபாட்டு நிகழ்வுகள், தேவ வழிபாடுகள், போதி பூஜைகள், தேவாலய ஆராதனைகள், பள்ளிவாசல் தொழுகைகளில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என கோரியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கும் நன்மை கிடைக்க வேண்டுமென்று மதவழிபாடுகளை செய்யுமாறு கோரியுள்ளார்.
எனினும், எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளித்து மத வழிபாட்டு நிகழ்வுகளை நடாத்துவது கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத வழிபாடு என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் மதகுருமாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழு விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையில் எவ்விதமான வன்முறைச் சம்பவங்களும் இம்முறை பதிவாகாமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள் இல்லையா என்று கேட்கும் அளவிற்கு இம்முறை வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் இதற்கு வேட்பாளர்களிற்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.