விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சேர் என நான் அழைக்கவில்லையென மறுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த மறுப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த 11ம் திகதி யாழ்ப்பாணம் வந்த சந்திரிகா, வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார்.
இதன்போது, விடுதலைப்புலிகளின தலைவர் பிரபாகரனை சேர் என அழைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது தென்னிலங்கையில் பரவலான விவாதத்தை கிளப்பியிருந்தது. இதையடுத்து, இன்று சந்திரிகா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அப்படியொருபோதும் பிரபாகரனை அழைக்கவில்லையென்றும், நாட்டிலுள்ள முற்போக்கான மக்கள் இத்தகைய தவறான பிரச்சாரங்களில் ஏமாற வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சர்வாதிகார, ஜனநாயக விரோத பயணத்தில் ஈடுபட்டுள்ள ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவால் தவறான பிரச்சாரம் பரப்பப்படுவதாகவும், வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் எதிர்கொள்ளும் நிச்சயமான தோல்வியால் வெறித்தனமாக செயற்படுவதாகவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.