‘நடா’ புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை 4.30 மணிக்கு கடலூர் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த புயலை சமாளித்து, கடலூர் மாவட்ட பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடந்தது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நடா புயலை சமா ளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 16 பல்நோக்கு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 30 மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அதில் 15 குழுவினர் தீயணைப்பு வீரர்களும், 10 குழுவில் போலீசாரும், 5 குழுவில் மீனவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
26 மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். அரசு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
டாக்டர்கள் பணியில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து, குளோரின் கலந்து 2, 3 நாட்களுக்கு தேவையான தண்ணீரை நிரப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 76 பேர் இன்று கடலூர் வந்தனர்.
ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். 50 படகுகளும், அதில் மீட்பு பணிக்கு 120 பேரும் ஆயத்தமாக உள்ளனர். 100 மரம் அறுக்கும் கருவிகள், 3 ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
1,000 மின் ஊழியர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மரங்களுக்கு அருகே பொதுமக்கள் யாரும் நிற்க வேண்டாம்.
830 மெட்ரிக் டன் அரிசி, பருப்பு, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. புயலை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.