சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தேர்தல் விதிமுறைகளை மீறி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கான பரப்புரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதனை விசாரணை செய்யச் சென்ற தேர்தல் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், அவருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.
இந்தத் தேர்தல் விதி மீறலுக்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கியதுடன், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரின் அலைபேசியைப் பறித்தெடுத்து அதிலிருந்த சம்பவம் தொடர்பான ஒளிப்படங்களையும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அழித்துள்ளார்.
இந்தச் சம்பவம் சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் தொட்டி ஆலடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பரப்புரை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் தேர்தல்கள் செயலகத்துக்கும் ஊடங்களுக்கும் அழைப்புகள் வந்தன.
அங்கு இளையோருக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக சிலர் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக யாழ்ப்பாணம் தேர்தல்கள் செயலகத்துக்குட்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலைய அதிகாரி சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு செய்தியாளர் ஒருவரும் சென்றிருந்தார்.
அங்கு 30 பேருக்கு மேற்பட்ட இளையோர்கள் அங்கு நின்றனர். தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பரப்புரைகள் நிறைவடைந்து வாக்களிப்புக்கான பணிகள் இடம்பெறும் காலத்தில் ஆகக் கூடியது 7 பேருக்கு மேல் ஓர் இடத்தில் கூட முடியாது.
அதனால் அங்கு கூடியிருந்தவர்களை அப்புறப்படுத்துமாறு தேர்தல் அதிகாரி பொலிஸாருக்குப் பணித்தார். அத்துடன், அங்கு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
அதனை அடுத்து தேர்தல் அதிகாரி அங்கிருந்து புறப்பட்டார். எனினும் இறுதி நேரத்தில் அவர் சம்பவ இடத்துக்கு திரும்பி வந்தார். அப்போதும் அங்கு இளையோர்கள் கூடியிருந்தனர்.
அதனால் தேர்தல் அதிகாரி அங்கிருந்து அலுவலகம் ஒன்றுக்குள் நுழைந்து விசாரணைகளை முன்னெடுத்தார். எனினும் தேர்தல் அதிகாரியின் கடமைக்கு அங்கிருந்தவர்கள் இடையூறு விளைவித்ததுடன், அலைபேசியில் அழைப்பு எடுத்த ஒருவர் ஆட்சி மாறினால் உம்மைத் தூக்குவோம் என அச்சுறுத்தும் பாணியில் உரையாடியதாக அறியமுடிகிறது.
மிரட்டலுக்கு அஞ்சாத அந்த அதிகாரி அங்கிருந்த ஆவணங்களைச் சோதனையிடப் போவதாகக் கூறியுள்ளார். அங்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பரப்புரைத் துண்டறிக்கைகள் காணப்பட்டுள்ளன.
பொலிஸார் உரிய விசாரணையை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல் வழங்கினார்.
எனினும் பொலிஸார் ஒத்துழைப்பு வழங்காததால், யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகத்துக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி வருமாறு கூறிவிட்டு தேர்தல் அதிகாரி அங்கிருந்து புறப்பட்டார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையின் செய்தியாளர் அங்கு ஒளிப்படம் எடுத்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அவரை அழைத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அலைபேசியை வழங்குமாறு கூறியுள்ளார்.
தன்னை ஊடகவியலாளர் என அரச தகவல் திணைக்கள அடையாள அட்டையைக் காண்பித்து அறிமுகம் செய்தார்.
அவரது ஊடகவியலாளர் அடையாள அட்டையையும் பத்திரிகையின் அடையாள அட்டையும் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர், செய்தியாளரிடமிருந்து அலைபேசியையும் பறித்துள்ளார்.
அலைபேசியில் இந்தச் சம்பவம் தொடர்பில் இருந்த ஒளிப்படங்களை அழித்த அந்த பொலிஸ் உத்தியோகத்தர், காணொலிப் பதிவும் இருக்கின்றதா என்று ஆராய்ந்துள்ளார்.
அதன் பின் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஊடகவியலாளரின் அடையாள அட்டைகளையும் அலைபேசியையும் அந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒப்படைத்துள்ளார்.
அதனையடுத்து அவற்றை சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடகவியலாளரிடம் அடையாள அட்டைகளையும் அலைபேசியையும் மீள வழங்க கூறினார். அதன் பின்னர் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைபேசியில் உள்ள படங்களை அழித்த பின்னர் கையளித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக யாழ்ப்பாணம் ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் ஊடகவியலாளர் முறைப்பாட்டை வழங்கினார்.
சுதந்திரக்கட்சி பிரமுகர் ஒருவரின் எரிபொருள் நிரப்பு நிலையம் அதுவென்பது குறிப்பிடத்தக்கது.