வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயல் தமிழக வட கடலோர பகுதியை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி மழை போல இருக்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. வரும் இரண்டு நாட்களில் எவ்வளவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.
புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் 2004-ம் ஆண்டு பின்பற்றப்படுகிறது. அது முதல் பெயர்வைக்கப்படும் 45-வது புயல் நாடா புயலாகும். இந்த புயலுக்கு நாடா என பெயர் தந்தது ஓமன் நாடாகும்.
நாடா புயலினால் இன்று மாலை முதலே மழை இருக்கக் கூடும். புயல் வலுவாக இருப்பதால் கியாண்ட் புயலைப் போல யூ டர்ன் போட வாய்ப்பில்லை. டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை வேதாரண்யம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கும். குறிப்பாக கடலூருக்கு அருகில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை முதல், மழை தீவிரமடைந்து டிசமப்ர் 2-ம் தேதி வரை கன மழை பெய்யும். மேலும் தமிழகத்தின் 75% இடங்களுக்கு மழை கிடைக்கும். டிசம்பர் 5-ம் தேதி வரை மழை எதிர்பார்க்கலாம்.
எவ்வளவு மழை பெய்யும்:
மழையின் வீரியத்தை பொறுத்து வானிலை ஆய்வு மையத்தின் மழை அளவீடு:
மழை நாள்: 2.5 மி.மீ மேல் மழை பெய்தால் அது மழை நாள்
லேசான முதல் மிதமான மழை: 2.5 மி.மீ முதல் 35.3 மி.மீ மழை
கன மழை: 64.5 மி.மீ முதல் 124.4 மி.மீ மழை
மிக கன மழை: 124.5 மி.மீ முதல் 200.4 மி.மீ மழை
மிக மிக கன மழை: 200.5 மி.மீ மேல்
நாடா டைம்லைன்:
நவம்பர் 30: தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 1 & 2: தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் அனேக இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் மிக கன மழைக்கும் வாய்ப்புள்ளது. சுமார் 65 முதல் 200 மி.மீ அளவுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம். தமிழகத்தின் 75% இடங்களில் மழை இருக்கும். உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மற்றும் மிக கன மழை இருக்கும். காவிரி டெல்டா விவசாயிகள் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். தென் தமிழகத்தில் பெரிய அளவு மழை இருக்க வாய்ப்பில்லை.
டிசம்பர் 3&4: கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நல்ல மழையும் சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
புயலின் தாக்கம்:
45 முதல் 65 கி.மீ அளவுக்கு டிசம்பர் 1&2-ம் தேதி மழை காற்றின் வேகம் இருக்கும். குடிசை, ஓட்டு வீடுகள் பாதிக்கப்படலாம். மரங்கள் முறிந்து விழவும் பாதிப்பு இருப்பதால் தொலை தொடர்பு சேவை சிறிய அளவில் பாதிக்கப்படலாம்.
எச்சரிக்கை:
மீனவர்கள் நவம்பர் 30-ம் தேதி மாலை முதல் அடுத்து 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி ஏற்பட்ட முதல் வெள்ளத்தின் போது 246.5 மி.மீ மழை பதிவாகியிருந்தது. டிசம்பர் 1-ம் தேதி 12 மணிநேரத்தில் மட்டும் 272 மி.மீ மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பெருத்த சேதம் ஏற்படுத்துவது போல மழை இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இருந்தபோதும், சாதாரண மழைக்கே தேங்கி நிறுகும் சாலைகள் கொண்ட சென்னை, கன மழைக்கு தயாராகத்தான் இருக்க வேண்டும். கடலூருக்கு மிட்புப் படைகள் தயார் நிலையில் சென்றிருப்பது நல்ல செய்தி.