தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் யாழில் நடத்திய கலந்துரையாடலில், திடீரென நுழைந்த சிலர் அங்கு தர்க்கத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன், அங்கிருந்த உறுப்பினர்கள் சிலரை தாக்க முயன்று, அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிய வருகிறது.
ரெலோ அமைப்பு இப்பொழுது பிளவடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. சிறிகாந்தா அணி ரெலோவில் இருந்து வெளியேறலாம் என கருதப்படுகிறது.
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி சிறிகாந்தா தலைமையிலான யாழ் அணியினர், சிவாஜிலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பநிலையை ஆராய இன்று யாழில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கட்சித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் பிரமுகர்கள் இந்திரகுமார் பிரசன்னா உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் அழைக்கப்பட்ட சுமார் 20 பேர் வரையானவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர். இதன்போது, கட்சிக்குள் நடக்கும் குழப்பங்கள் குறித்து ஆராயப்பட்டது.
இதன்போது,கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்காத சிறிகாந்தா ரெலோவை சேர்ந்த சிலர் கூட்டம் நடந்த மண்டபத்திற்குள் நுழைந்து தர்க்கத்தில் ஈடுபட்டனர். தம்மை மீறி யாழில் கட்சி நடத்த முடியாதென மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர், நல்லூர் பிரதேசசபை உப தவிசாளர் உள்ளிட்டவர்களே தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் கனகரட்ணத்துடன் முரண்பட்டு, அவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அத்துடன், மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலையிட்டு, நிலைமையை சுமுகமாக்க முயன்றபோதும், தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள் அதை செவிமடுக்கவில்லை.
சிறிதுநேர குழப்பத்தின் பின்னர் அவர்கள் வெளியேறி சென்றனர்.
இதேவேளை, செல்வம் அடைக்கலநாதனால் அழைக்கப்பட்ட இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாமென மாவட்டத்திலுள்ள ரெலோ பிரமுகர்களை, சிறிகாந்தா ரெலோவினர் தொலைபேசி வழியாக அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் நடந்த இந்த கலந்துரையடலின் பின்னர், கட்சியின் யாழ் மாவட்ட பிரமுகர்களுடனான கலந்துரையாடலிற்கு சிறிகாந்தா அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த கூட்டத்தின்போது, தமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியிலிருந்த ரெலோ வெயளியேற வேண்டுமென அவர் குறிப்பிட்டிருந்தார்.
வரும் சனிக்கிழமை கட்சியின் தலைமைக்குழு கூட்டம் வவுனியாவில் நடைபெறும்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேவரும் பிரேரணையை தான் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, வலிகிழக்கு தவிசாளர் தியாகராசா நிரோஷ் தலையிட்டு, தென்னிலங்கை அரசியலை சுட்டிக்காட்டி, தற்போ து கட்சிகள் தனிவழி செல்லக்கூடாது என்றார்.
இது பற்றிய விவாதங்கள் நடந்து முடிந்ததும், செயலாளர் என்.சிறிகாந்தா புறப்பட்டு சென்றதும், சிறிகாந்தா ரேலோவை சேர்ந்த சிலர், நிரோஷை அச்சுறுத்தியதாக குறிப்பிடப்படுகிறது. இன்றைய தினம் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கினாலும் ரெலோவிற்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.