பொதுபல சேனா அமைப்பை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கலைத்து விடுவதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த நான்கரை வருடங்களாக இலங்கையின் பெரும்பான்மையான இனமான சிங்கள மக்களின் அபிலாசைகளை சீர்குழைக்கும் வகையில் சில அரசியல்வாதிகள் செயற்பட்டதாக தெரிவித்தார்.
அவ்வாறான செயற்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்க சிங்கள தலைவர்கள் பயந்தாகவும் அவர்கள் அவ்வாறு பயப்பட்டதற்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் தமக்கு கிடைக்காமல் போகும் என்பதே பிரதான காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இன்று வெறுமையாக இருந்த வீட்டுக்கு தகப்பன் வந்தது போன்றதொரு நிலைமை தோற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தந்தையில்லாமல் அனாதரவாகியிருந்த அதேபோல் புதைக்கப்பட்ட சிங்கள இனம் இன்று உயிர் பெற்றுள்ளதாகவும் அந்த மீள் எழுச்சி சிறுபான்மை மக்களுக்கு விரோதமானது அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
பௌத்த தர்மத்திற்கு ஏற்பவே தான் தேரராக தெரிவாகியுள்ளதாக தெரிவித்த அவர், மக்களுக்கு பொறுப்பு கூறும் தலைவர் ஒருவர் இல்லாது போனமையாலேயே தான் நாடு முழுவதும் சென்று பிரசாரங்களை மேற்கொண்டதாகவும் கூறினார்.
தற்போது அவ்வாறான பயம் இல்லை எனவும், பொது தேர்தல் வரையும் பொதுபல சேனா அமைப்பு செயற்படும் எனவும் அதன் பின்னர் அந்த அமைப்பை கலைப்பதாகவும் அவ்வாறு கலைத்த பின்னர் தான் சகல இன மக்களுக்காகவும் தர்ம யாத்திரையில் ஈடுபட போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.