திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளில் இந்த நிலைமை காணப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து மூதூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட தோப்பூர் பகுதியில் வீடுகள், பொது இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் சூழல் இன்று சோதனையிடப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையில் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
இதன்போது டெங்கு காய்ச்சல் பரவும் வகையில் வீட்டுச்சூழலை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 90 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 70, 901 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாதத்திற்குள் மாத்திரம் 7,736 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.