மத்திய பிரதேசத்தில் பஸ் டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் ஆபாச வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேச தலைநகர் போபால் அருகே உள்ள வித்யாநகர் பஸ் நிலையத்தில், அரசு பஸ் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதற்காக நவீன எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இது வேகமாக பரவி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து கழகம் சார்பில் சைபர் பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த எந்திரத்தின் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) கடந்த 3 ஆண்டுகளாக மாற்றப்படாததால், அதை தெரிந்து கொண்ட யாரோதான் இந்த படத்தை அந்த எந்திரத்தில் பதிவேற்றியிருக்கலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக அந்த எந்திரத்தை பராமரிக்கும் நிறுவனத்தின் முன்னாள் அல்லது இந்நாள் ஊழியர்கள் யாரும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டு உள்ளனர்.