வேலூர் மாவட்டத்தில் குழந்தையின் வாயில் துப்பட்டாவை திணித்து கொலை செய்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கௌரிசங்கர் என்பவரும் பவித்ரா (23) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்த தம்பதியினருக்கு 8 வயதில் ரம்யா, ஒன்றரை வயதில் மௌலிக்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஓராண்டிற்கு முன் கௌரிசங்கருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவருடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் குழந்தைகளுடன் தனியாக தவித்து வந்த பவித்ரா, கணவரின் ஊரில் இருக்க பிடிக்காமல், வாலாஜாபேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குழந்தைகளுடன் தங்கி வந்துள்ளார்.
மகள் ரம்யாவை அருகாமையில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்த்து விட்டதோடு, தினமும் வேலைக்கு செல்லும் நேரத்தில் மௌலிக்காவை பக்கத்து வீட்டாரின் பொறுப்பிலும் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.
இரவு வீடு திரும்பிய பிறகு குழந்தையை வாங்கிக்கொள்வார். ஆதரவாக வேறு யாரும் இல்லாததால் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் உதவியாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பவித்ரா, நேற்றிரவு திடீரென சத்தம்போட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், குழந்தை மௌலிக்கா சுயநினைவிழந்து கிடப்பதை பார்த்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சில மணி நேரங்களுக்கு முன்பு குழந்தை இறந்திருப்பதை உறுதி செய்து, பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், பவித்ரா மற்றும் அவரின் மூத்த மகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுமி, அழுதுகொண்டிருந்த மௌலிக்காவின் வாயில் பவித்ரா துணியை வைத்து அழுத்தியதாக கூறியுள்ளது.
இதனை கேட்டு சந்தேகமடைந்த பொலிஸார், பவித்ராவிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். வேலைக்கு செல்லாமல் ஏற்கனவே மனஅழுத்ததில் இருந்த போது, குழந்தை விடாமல் அழுதுகொண்டிருந்ததால், எரிச்சலடைந்து துணியை வாயில் வைத்து அழுத்தியதாக பவித்ரா பொலிசாரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காகவே அழுத்தினேன். மாறாக, கொலை செய்யும் நோக்கில் இல்லை என்று கூறியுள்ளார். இந்த நிலையில் பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.