அண்மையில் பதவியேற்ற இடைக்கால அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக யாரும் பதவியேற்கவில்லை. ஜனாதிபதி கோட்டாபயவே பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்க தீர்மானித்திருந்தபோதிலும், அரசியலமைப்பின் தடை காரணமாக அதை இறுதி நேரத்தில் தவிர்த்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் அமைச்சரவை பதவியேற்றது. இதன்பின்னர் கோட்டாபயவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில், பாதுகாப்பு மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சு மஹிந்த ராஜபக்சவின் கீழ் இணைக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அது நீக்கப்பட்டிருந்தது.
அரசியலமைப்பின்படி, ஜனாதிபதியே ஆயுதப்படைகளின் தளபதியாவார். அதனாலேயே நேற்று முன்தினம் நள்ளிரவு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முப்படையினரையும் களமிறக்கும் வர்த்தமானியை வெளியிட்டார். எனினும், 19வது திருத்தம், ஜனாதிபதிகள் அமைச்சு பதவியை வகிப்பதை தடை செய்கிறது. பாதுகாப்பு அமைச்சை குறிவைத்து செயற்பட்ட கோட்டாபய, அரசியலமைப்பு இடம்கொடுக்காததால் குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, பாதுகாப்பு அமைச்சர் இல்லாத பாதுகாப்பு அமைச்சு இயங்குகிறது. நாளையோ, நாளை மறுதினமோ, பாதுகாப்பு இராஜாங்க அல்லது பிரதியமைச்சர் நியமிக்கப்படலாமென தெரிகிறது. பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கேள்விகளிற்கு பதிலளிக்கவே இந்த ஏற்பாடு.
இந்த குழப்பத்தையடுத்து, ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை வகிக்க அரசியலமைப்பில் இடமுண்டா என, உயர்நீதிமன்றத்தில் கோட்டாபய அபிப்பிராயம் கேட்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.