தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படாத குறுந்தூர ஓட்ட வீராங்கணை ஒருவர் இறுதிநேர சிபார்சின் பேரில் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. தெரிவுக்குழுவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை பதிமூன்றாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதற்காக 27 போட்டிகளில் பங்கேற்க இலங்கையிலிருந்து 600க்கும் அதிகமான வீர, வீராங்கணைகள் செல்கின்றனர்.
தடகள அணி வீரர்கள் மொத்தம் 66 பேர். இவர்களின் பெயர்ப்பட்டியல் நேபாளத்தின் தெற்காசிய விளையாட்டு அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், விளையாட்டு அமைச்சிலிருந்து இன்னொரு வீராங்கணை இணைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் சென்றுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் கையெழுத்துடன் அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பதவிவிலகியதாக ஹரீன் பெர்னாண்டோ 19ம் திகதி அறிவித்திருந்த நிலையில், 20ம் திகதி இந்த கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தார்.
கேட்வே இன்டர்நஷனல் பாடசாலையின் ஷெலின்டா ஜோன்சன் என்ற வீராங்கணையே அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தேர்வு விழாவாக தேசிய சாம்பியன்ஷிப் ஓகஸ்ட் மாதம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற விளையாட்டு வீரர்கள் தெற்காசிய விளையாட்டுப் தடகள அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தகுதிச்சுற்றில் காயமடைந்ததாக குறிப்பிட்டு, நேபாளம் செல்லும் அணியில் தன்னை இணைக்கும்படி ஷெலின்டா விடுத்த கோரிக்கையை தேர்வாளர்கள் நிராகரித்திருந்த நிலையிலேயே, ஹரீன் பெர்னாண்டோவின் தலையீட்டில் தெற்காசிய விளையாட்டு குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.
நடீஷா ராமநாயக்க, ஷர்மிளா ஜோன் ஆகியோர் தேர்வாளர்களால் தெரிவான வீராங்கணைகளாவர்.
கடந்த ஆறு மாதத்தில் இலங்கையின் முன்னணி பெண் வீராங்கணைகளின் 200 மீற்றர் சிறந்த பெறுபேறு
நடீஷா ராமநாயக்க – 24.49 வினாடிகள் (ஓகஸ்ட் 26)
லட்சிகா சுகந்தி- 24.49 வினாடிகள்
லட்சிகா சுகந்தி (24.50 வினாடிகள்)
லட்சிகா சுகந்தி – 24.51 வினாடிகள் (ஓகஸ்ட் 26)
ஷர்மிளா ஜோன்- 24.52 வினாடிகள் (ஓகஸ்ட் 17)
ஷெலின்டா ஜோன்சன்- 24.69 வினாடிகள் (செப்டம்பர் 11)