புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் நாட்டினுள் சட்டம் உரிய வகையில் செயற்பட ஆரம்பித்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை வலஸ்முல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டதன் பின்னர் அவர்களுக்கு புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்யத் தேவையில்லை என்றும் தற்போது இருக்கும் வாகனங்களையே அவர்கள் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், புதிய கட்டிடங்களை வாடகைக்கு பெறவேண்டிய தேவை இல்லையென்றும் வாடகை கட்டிடங்களில் இருந்து வௌியேறி அரச கட்டிடங்களிலேயே அமைச்சகத்தை நடாத்திச் செல்ல சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்கு முன்னர் பொதுமக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டால் எதிர்காலத்தை வெற்றிக் கொள்ள முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.