கனடா நாட்டில் சாலை விபத்தில் சிக்கிய தாயார் பலியானதை தொடர்ந்து அவரது 2 மாதக்குழந்தை தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரொறொன்ரோ நகரில் வசித்து வரும் Razan Dumitru என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது மனைவி மற்றும் 2 மாத ஆண் குழந்தையுடன் காரில் வெளியே சென்றுள்ளார்.
கேம்பிரிட்ஜ் சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென எதிர் திசையில் இருந்து வந்த கார் ஒன்று இவருடைய கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த அவருடைய மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார். சிறிய காயங்களுடன் கணவர் உயிர் பிழைத்துள்ளார்.
ஆனால், பின் இருக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்த ஆண் குழந்தையின் தலையில் பலமாக அடி விழுந்துள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு குழந்தை அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
மனைவியின் இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியாமல் தந்தை தனது குழந்தைக்கு அருகிலேயே இருந்து 24 மணி நேரமும் கவனித்து வருகிறார்.
ஆனால், இரண்டு நாள் ஆன நிலையிலும் குழந்தை அபாயக்கட்டத்தை தாண்டாமல் படுத்த படுக்கையாக உள்ளது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், குழந்தை உயிர் பிழைக்க அனைத்து சிகிச்சைகளும் மேற்கொண்டு வருவதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், சாலையில் விபத்து ஏற்படுத்திய 26 வயதான நபர் மதுபோதையில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நபர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.