ரூபாய் நோட்டு தடை கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் நடவடிக்கை என்றாலும், சாமானிய மக்களை பலவிதங்களில் வாட்டி வதைக்கின்றது.
இந்நிலையில் ரூபாய் நோட்டு தடை காரணமாக தினக்கூலி பணி செய்யும் ஒருவர் தனது மனைவியின் இறுதிச்சடங்கை நடத்த பணம் இல்லாமல் வங்கி வாசலில் காத்திருந்த கொடுமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நொய்டாவை சேர்ந்த லால் என்பவர் தனது மனைவி இறந்துவிட்டதால் இறுதிச்சடங்கு செய்ய வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் அவர் வங்கி வாசலில் மனைவியின் பிணத்துடன் உட்கார்ந்து காத்திருக்கின்றார்.
இந்த தகவல் தெரிந்தவுடன் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் இறுதிச்சடங்கிற்கு பணம் கொடுக்க முன்வந்துள்ளார். ஆனால் அந்த பணத்தை வாங்க மறுத்த லால், தனது சொந்த பணத்தில்தான் மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். இறுதியில் மாவட்ட நிர்வாகம் வங்கிக்கு பணம் கொடுத்ததை அடுத்து தனது மகனின் கணக்கில் இருந்து 15,000 ரூபாயை லால் எடுத்து மனைவியின் இறுதிச்சடங்கை நடத்தியுள்ளார்.