நேற்று முன்தினம் இரவு முதல் நாடா புயல் தாக்கம் காரணமாக வடமாகாணத்தின் பல சீரற்ற காலநிலை நிலவுகின்றது.
இந்நிலையில், பருத்தித்துறைப் பிரதேசத்தில் மோசமான கடல் கொந்தளிப்பு காரணமாக மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ். கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், திக்கம் பகுதியில் இருந்து மூன்று படகுகளில் ஆறு மீனவர்களும், வல்வெட்டித்துறைப் பகுதியிலிருந்து ஒரு படகில் சென்ற இரு மீனவர்களும், இன்பர்சிட்டி பகுதியிலிருந்து சென்ற இரு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கடல் தொடர்ச்சியாக கொந்தளித்துக் கொண்டிருப்பதால் மீனவர்களைத் தேடும் பணி முன்னெடுக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடா எனப்படும் புயல் காங்கேசன்துறை கடற்பரப்பிற்கு அப்பால் நிலைகொண்டுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் அசாதாரண காலநிலை நிலவுகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும், கடலும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
எனவே, மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்ல தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.