எதிர்காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் குறுகிய நோக்கில் தேசிய பிரச்சினை தீர்வுக்கான செயற்பாடுகளை சீர்குலைக்க முற்பட வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேர்மையான வகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி; எதிர்ப்பு நடவடிக்கைகள் நாட்டை மோசமான நிலைக்கே இட்டுச் செல்லும் என்றும் தெரிவித்தார்.
சம்பந்தன் போன்ற சிறந்த தலைவர் ஒத்துழைப்பு வழங்கும் சிறந்த தருணமிது என குறிப்பிட்ட ஜனாதிபதி; தவறான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை திசை திருப்ப வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றிய ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-
நாட்டில் நல்லிணக்கம், ஐக்கியம் ஏற்படாவிடின் நாட்டை சோகத்தில் ஆழ்த்திவிடும்.எமது நாட்டிலுள்ள பிரச்சினைகளும் இன்று நேற்றைய பிரச்சினைகளல்ல. பல தசாப்தங்களாக தொடர்பவை.
சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டை ஆட்சிசெய்த அனைத்துத் தலைவர்களும் இந்த பிரச்சினையைத் தமது அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளான பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் போன்றவை பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கைகூடவில்லை.
பௌத்த பிக்குகளே கிளர்ந்தெழுந்து பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தமை வரலாற்றில் குறிப்பிடக்கூடிய விடயம்.
இத்தகைய எதிர்ப்புகளினால் பிரச்சினை முற்றி மோதல்களுக்கு வழிவகுத்ததுடன் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தியின் வீழ்ச்சிக்கும் காரணமாயின.
கடந்த காலங்களில் அமைச்சர்களை நியமிக்கும் போது வடக்கு, கிழக்கிற்கு எத்தனை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர் என்பதைக் கவனித்தால் அபிவிருத்திக்கான பின்னடைவிற்கு அதுவே சிறந்த உதாரணமாகும்.
ஜே. ஆர். ஜெயவர்தன – ராஜிவ்காந்தியுடன் மேற்கொண்ட இந்திய, இலங்கை உடன்படிக்கையும் எதிர்ப்பு காரணமாக நடைமுறைப்படுத்தப்படாமல் போனது.
அதே போன்றே இப்போதும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் மிக மோசமாக பேசப்படுகிறது.
இத்தகைய போக்குகள் மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கே வழிவகுக்கும்.
ஜே. ஆர் – ராஜிவ் ஒப்பந்தத்தின் 13 வது திருத்தத்தினூடாக மாகாண சபைகள் நடைமுறைக்கு வந்தன. இது தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் பிரச்சினையாக மாறியது.
இதனால், எமது நாட்டவர் பெரும்பாலானோர் இடம்பெயர இது காரணமாகியது. இன்றும் எமது மக்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர்.
இது எமது நாட்டின் கௌரவத்தைப் பாதிக்கும் விடயம் என்பதை நாம் உணர வேண்டும்.
பிரேமதாச போன்ற சிறந்த தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் யுத்தம் பலி கொண்டுள்ளது.
யுத்த வெடிச் சத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நாட்டைப் பிளவுபடுத்தும் சிந்தனையைத் தோற்கடிக்க இதுவரை முடியாமற் போயுள்ளது.
சர்வதேச ரீதியில் நிலவும் இந்த சிந்தனை தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே நிரந்தர சமாதானம் உறுதிப்படுத்தப்படும்.புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த யுகங்களைப் போன்றே அரசியல் தீர்வொன்றுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் போது மிக மோசமான கணிப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாக மோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன.
அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தேசிய பிரச்சினையை பயன்படுத்துவோர் ஒருபோதும் தமது நோக்கத்தை அடைய முடியாது.
அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை சீர்குலைக்க சதிசெய்வது நாட்டின் எதிர்காலத்தை அதள பாதாளத்திற்குத் தள்ளுவதாகும்.
அரசாங்கம் மிக நேர்மையாக செயற்பட்டு வருகிறது. சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை இலக்காகக் கொண்டு செயற்படும் போது அதற்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம்.
பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம். 50, 60 களின் பிரதிபலனே யுத்தத்துக்கு வழிவகுத்தது. தீர்வுகளில் சம்பந்தப்படுவோர் நம்பிக்கையுள்ளவர்களாக வேண்டும்.
இத்தகைய, செயற்பாடுகளை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிர்காலத்தில் அதிகாரம் கிடைக்கப் போவதில்லை.
நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாக இப்போது விமர்சிக்கும் மஹிந்த ராஜபக்ச 13வது திருத்தம் அல்ல 13 ற்குப் போவதாக ஐ. நா. செயலாளரிடம் உறுதியளித்ததை குறிப்பிட விரும்புகிறேன்.
தேசத்துரோகியாக நாம் செயற்படுபவர்களல்ல, மாறாக தேசத்தை நேசிப்பவர்கள். தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண சிறந்த தருணம் இது.
எதி்ர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இதற்கு ஒத்துழைக்கும் சிறந்த தலைவர்.பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். காலம் தாமதிப்பது எமக்கும் பாதிப்பாகும்.
மேடைகளில் வீர வசனம் பேசி விமர்சனங்களில் ஈடுபடுவோர் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்.
24 வருடங்கள் வடக்கில் அகதி முகாம்களில் வாழும் மக்களின் நிலை மிகவும் கொடியது.
தெற்கு மக்களுக்கு இந்நிலை ஏற்பட்டால் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்னவென்பதை சிந்தித்துப் பாருங்கள்.
வடக்கு மக்கள் கேட்பது அவர்களது காணிகளையே. அது அவர்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும்.
நியாயமற்ற பிரசாரங்களை விடுத்து நியாயமாக பிரச்சினைக்குத் தீர்வு காண உதவுங்கள்.
மீண்டும் யுத்தம் ஏற்படாமல் நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுப்போம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.