தமிழகத்தில் சிகிச்சைக்காக வீடியோவில் பேசி கஷ்டப்பட்டு நிதி வசூலித்த பணத்தை ஏமாற்றிய நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த முருகன் என்பவர், விபத்தில் ஏற்பட்ட முதுகு தண்டுவட பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.
தனது பிரச்னையை வீடியோவில் பேசிய முருகன் அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி சிகிச்சைக்கு நிதி வசூலித்தார்.
இதன் மூலம் அவர் வங்கி கணக்கில் 2 லட்சம் ரூபாய் வரை நிதி சேர்ந்தது.
இதற்கிடையே முருகனின் நெருங்கிய நண்பரான பெனட் என்பவர், நாகர்கோவில் அடுத்த தேரேக்கால்புதூரில் உள்ள தனியார் நரம்பியல் மருத்துவமனையில் முருகனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
அங்கு அரசு மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, அதனை முருகனிடம் பெனட் மறைத்துள்ளார். இதோடு மருத்துவமனை பெயரில் போலி ரசீதை காண்பித்து, சிறிது சிறிதாக 2 லட்சம் ரூபாயை நண்பனிடம் மோசடி செய்தார்.
இந்த மோசடியை கண்டுபிடித்த மருத்துவமனை நிர்வாகம் பொலிசில் புகார் அளித்தது.
அதை தொடர்ந்து பெனட்டை பொலிசார் கைது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.