மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரன பிளான்டேசன் கம்பனிக்கு உட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்தின் நான்கு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (29) காலை முதல் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய அடையாளஅட்டை மற்றும் கொழுந்து நிறுக்கும் கம்ப்யூட்டர் தராசு போன்ற புதிய முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், இந்த புதிய முறையால் தாமே பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும், நூற்றுக்கு பத்து பேருக்கு மாத்திரமே முழுப்பெயர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உளாளதாகவும் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த புதிய முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாம் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் பிறகு தொழிற்சங்கங்களின் இணக்கப்பாட்டிற்கு அமைய தாம் பணிக்கு திரும்பியதாகவும் கம்பனியின் இலாப நோக்கம் கருதியே இந்த புதியமுறை கொண்டு வரப்படுவதாகவும் இதற்கான உரிய தீர்வை தொழிற்ச்சங்கங்கள் பெற்று தர வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர் .
குறித்த தோட்டத்தின் பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிசார் வரவழைக்கபட்டதையடுத்து பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தோட்ட முகாமையாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
(சாமிமலை நிருபர் ஞானராஜ் )