திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்றும், கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இருவரும், பஸ்ஸில் பயணம் செய்த மூவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று காலை 6.00 மணியளவில் கந்தளாய் 92 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள பௌத்த விகாரைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சென்ற தனியார் பஸ்சொன்றும், கொழும்பிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற கார் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதிக வேகமும், சாரதிகளின் அசமந்தப்போக்கும் நித்திரையுமே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.