இலங்கையில் உள் நாட்டு யுத்தம் 2009இல் முடிவுக்கு வந்தபோது, ஒரு மில்லியன் பேர் வரை நாட்டை விட்டு வெளியேறினர்.
அப்படி அவுஸ்திரேலியாவுக்கு சென்று தங்கள் வாழ்வை துவங்க நினைத்த பலரும் அவுஸ்திரேலிய அரசால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அவர்களது இன்றைய நிலை என்ன என்பதை சற்றே விவரிக்கிறது இந்த செய்தி.
2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிச் செல்லும் படகு ஒன்றில் ஏறினார் அந்தோணிப்பிள்ளை தர்ஷன்.
மிகக் குறைந்த உணவு, தண்ணீருடன் படகில் 21 நாள் செலவிட்ட அந்தோணிப்பிள்ளை, அவுஸ்திரேலியாவில் கால் வைத்தபோது ஆறு மாதங்கள் புலம்பெயர்தல் சிறையில் அடைக்கப்பட்டார்.
15 நாட்கள் கிறிஸ்துமஸ் தீவில் காவலில் இருந்த அவர், பின்னர் டார்வின் மற்றும் குயின்ஸ்லாந்து காவல் மையங்களுக்கு மாற்றப்பட்டார்.
கடைசியாக, மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பியபோது, அவர் மக்கள் இன்னமும் பல ஆண்டுகால யுத்தத்தின் தாக்கத்திலிருந்து முழுமையாக மீளாமலிருப்பதைக் காண நேர்ந்தது.
இன்று கடலுக்குச் சென்று, சிறிய மீன்களையும் நண்டுகளையும் பிடித்து வந்து உள்ளூர் சந்தைகளில் விற்று வாழ்ந்துவருகிறார் அந்தோணிப்பிள்ளை. 26 ஆண்டுகள் இலங்கையில் யுத்தம் நீடித்தது.
மோதிக்கொண்ட இரு பிரிவினர் மீதும், பொதுமக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது முதல் சிறுவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தியது வரை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
எதனால் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு போனார் என்பதைக் குறித்து பேச விரும்பாத அந்தோணிப்பிள்ளை, தான் கறிக்கடையில் வேலை பார்த்த நாட்களை நினைவுகூர்கிறார்.
ஆனால் அவரது அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டு, மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டபோது, அவரது வேலை செய்யும் உரிமை பறிக்கப்பட்டு, 28 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளார் அந்தோணிப்பிள்ளை.
வேலை பறிக்கப்பட்டு, உணவும் மறுக்கப்பட்ட நிலையில், நாடு திரும்புவதைத்தவிர அந்தோணிக்கு வேறு வழியில்லை.
அந்தோணியைப்போலவே, அவுஸ்திரேலியாவுக்கு வாழும் கனவுகளுடன் சென்று ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட்ட பலர் இருக்கிறார்கள்.
அத்தகைய ஒரு குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஆறு மாதங்களுக்கொருமுறை, அவர்கள் நீர்க்கொழும்புவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், ஆஜராகியும் வருகிறார்கள்.
ஆனால், தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்பது அவர்களுக்கு இன்று வரை தெரியாது.
குயின்ஸ்லாந்தின் Biloelaவில் வசித்துவரும் நான்கு பேர் அடங்கிய குடும்பம் ஒன்று அவுஸ்திரேலிய அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருக்கும் நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
மக்கள் ஆதரவு இருந்தும், அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலித்து, அகதி விசா அளிக்கப்படாதவர்களை நாடு கடத்தும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றுவருவதால், அவர்கள் எந்நேரமும் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம்.
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை வல்லுநராக இருக்கும் Dr முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் என்பவர், அவுஸ்திரேலியாவுக்கு தமிழர்கள் புலம்பெயர்தல் தொடர்பான ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு திரும்பும் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு என்ன நடக்கும் என்பதை கணிப்பது தேர்தலுக்குப்பின் கடினமான ஒன்றாகிவிட்டது என்கிறார்.
நவம்பர் 16க்கு முன் நேர்மறையாக சிந்தித்திருப்பேன். ஒரு பிரச்சினையும் இருக்காது என்று கூட கூறியிருப்பேன்.
ஆனால் தற்போதைய சூழலில், புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புவதற்கு முன், இலங்கையின் புதிய ஜனாதிபதி குறிப்பிட்ட சிறுபான்மையினர் விடயத்தில் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை கவனிப்பதற்காக வெளி நாட்டு அரசாங்கங்கள் ஆறு முதல் 12 மாதங்கள் பொறுத்திருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன் என்கிறார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் பத்தாண்டுகளுக்கு முன் முடிந்துவிட்டதால் புகலிடக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திரும்புவது பாதுகாப்பானது என எளிதாக கூறிவிட முடியாது என்கிறார் அவர்.
இந்நிலையில் Biloelaவிலிருக்கும் குடும்பத்தை நாடு கடத்தும் முன் வெளிநாட்டு அரசுகள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்கிறார் அவர்.
அவுஸ்திரேலிய அரசு, தன் நாட்டில் புகலிடம் கோரி வருபவர்களை உற்சாகப்படுத்த விரும்பவில்லை என்றாலும், அதற்காக இத்தகைய சூழலில் அவர்களை அவசரப்பட்டு திருப்பி அனுப்புவது முறையல்ல என்று கருதுகிறேன் என்கிறார் அவர்.
இலங்கையைப் பொருத்தவரை இது மாறும் ஒரு காலநிலை, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாது.
கடந்த ஐந்தாண்டுகளாக நாம் அனுபவித்த சுதந்திரம் திரும்பப் பெறப்படும் ஒரு காலகட்டமாகக் கூட அது இருக்கலாம் என்கிறார் சர்வானந்தன்.