தமிழகத்தில் மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆசிரியர் தன்னைக் கொடுமைப்படுத்தியதால் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தொட்டப்ப நாயக்கம்னூரில் வசித்து வரும் சிங்கம், அமுதா தம்பதியரின் மகன் பாலாஜி(14). அருகே இருந்த தனியார் பள்ளியில் 9 வகுப்பு படித்து வந்தநிலையில், ரவி என்ற ஆசிரியரிடம் டியூசன் சென்று வந்துள்ளார். பின்பு அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு எடுக்கும் வேறு ஆசிரியரிடம் டியூசன் படிக்கச் சென்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆசிரியர் ரவி பாலாஜியை கொடுமைபடுத்தியுள்ளார். சக மாணவர்கள் முன்பு சத்தம் போடுவதும், கோபமாக நடந்துகொள்வதுமாக இருந்துள்ளார். இதனை தனது பெற்றோரிடம் பாலாஜி கூறிய போது, பெற்றோர்கள் பாலாஜியை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6ம் திகதி வகுப்பில் வைத்து ஆசிரியர் ரவி பாலாஜியை மீண்டும் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
மேலும் இறப்பதற்கு முன்பு பாலாஜி எழுதிய கடிதத்தில், தன்னை ஆசிரியர் ரவி கொடுமைப்படுத்துவதால் இவ்வாறான முடிவை எடுத்துள்ளேன். அவனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.