அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு மக்காவின் நிராகரிப்பாளர்கள் ஏராளமான துன்பங்களை கொடுத்தனர். இந்த கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்ட நபிகளார், தன் உயிருக்கே ஆபத்து என்ற நிலை வந்த போதுதான் அல்லாஹ்வின் ஆணைப்படி மக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள்.
அதன் பின்னர் மக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் அம்மக்கள் பெரிதும் துன்புற்றனர். இதைக் கேள்விப்பட்ட நபிகளார், உணவுப்பொருட்களை சேகரித்து அபூசுப்யானுக்கு அனுப்பி வைத்து அந்தமக்களின் துயர் துடைத்தார்கள்.
‘தன்னை கொடுமைப்படுத்தியவர்கள் பஞ்சத்தின் கொடுமையை அனுபவிக்கட்டுமே’ என்று நபிகளார் நினைக்கவில்லை. அடுத்தவரின் துன்பம் கண்டு இரக்கம் கொண்டு அவர்களுக்கு உதவி புரியும் நல் இயல்புடையவராகவே நபிகளார் விளங்கினார்கள்.
அதுபோன்றே உணவு தேவைக்கு மக்காவாசிகள் யமாமா நாட்டையே பெரிதும் நம்பி இருந்தார்கள், அங்கிருந்து தான் உணவு தானியங்கள் மக்காவுக்கு வந்து கொண்டிருந்தது. சுமாமது இப்னு ஆதால் என்பவர் யமாமா மக்களின் தலைவராக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
‘நபிகளாரையும் அவர்தம் தோழர்களையும் துன்புறுத்திக் கொண்டிருந்த மக்காவாசிகளுக்கு ஒரு மணி தானியம் கூட அனுப்பக் கூடாது’ என்று தம் பகுதி மக்களுக்கு கட்டளையிட்டார். மக்காவாசிகள் சுமாமாதுவின் முடிவை மாற்றிட எவ்வளவோ முயன்றும் வெற்றி பெறமுடியவில்லை,
அண்ணலார் சொன்னால்தவிர வேறு யாருடைய பேச்சையும் சுமாமது கேட்கமாட்டார் என்பதை புரிந்து கொண்ட மக்காவாசிகள் நபிகளாருக்கு கடிதம் எழுதினார்கள்.
‘எங்களுக்கு உணவு தானியம் அனுப்பக்கூடாது என்று யமாமா மக்களுக்கு சுமாமாது பிறப்பித்த உத்தவை திரும்ப பெறச் சொல்லுங்கள். இந்த இக்கட்டிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதத்தை பார்த்த நபி (ஸல்) அவர்கள் சுமாமாதுவுக்கு உடனே கடிதம் எழுதினார்கள். அதில் ‘தன்னை நிராகரிப்பவர்களுக்கும், தனக்கு இணை வைப்பவர்களுக்கும் கூட இறைவன் கருணை காட்டுகிறான். நாமும் அதைத்தான் பின்பற்ற வேண்டும், ஆகவே மக்காவுக்கு அனுப்பப்படும் உணவு தானியங்களை நிறுத்தாதீர்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.
பொதுத்தேவைக்கும், பொது நியதிக்கும் மதிப்பளிக்கும் மாண்பாளராகவே நபிகளார் எப்போதும் விளங்கினார்கள்.
கஅப் இப்னு சுஹைர் இவர் ஒரு பரம்பரை கவிஞர். நபிகளார் மீது இட்டு கட்டி கவிதை புனைந்து அவதூறு பரப்பிக் கொண்டிருந்தவர். இவரது சகோதரர் புஜைர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவராய் இருந்தார்.
எனவே கஅபிற்கு, புஜைர் சகோதர வாஞ்சையுடன் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘கஅபே, துர் கவிதைகளாலும், அதனை பரப்புவதாலும் உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தன்னிடம் மன்னிப்புக்கேட்கும் எவரையும் நபிகளார் தண்டிப்பது இல்லை. எனவே, தூய இதயத்தோடு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நபிகளாரை கண்டு மன்னிப்புக்கேள். நீ மன்னிக்கப்படுவாய்’ என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
கடிதம் கண்டவுடன் பதறிப்போன கஅப் மதீனா விரைந்தார். ஒரு தொழுகைக்கு பின் நபிகளாரை சந்தித்தார். அப்போது அவர் தன்னை கஅப் என்று நபிகளாரிடம் காட்டிக் கொள்ளவில்லை.
அவர் ஒரு மூன்றாம் மனிதர் போல பேச்சை தொடங்கினார். ‘அல்லாஹ்வின் தூதரே, கஅப் மனம் வருந்தியவராக உங்களிடம் வந்து ஒரு முஸ்லிமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறார். அவரை நான் உங்களிடம் அழைத்து வந்தால் நீங்கள் கஅபை ஏற்றுக் கொள்வீர்களா?’ என்றார்.
அண்ணலார் ‘ஆம்’ என்று சொன்னது தான் தாமதம், ‘அல்லாஹ்வின் தூதரே, நான் தான் அந்த கஅப்’ என்று நபிகளாரின் கரம் பற்றிக் கொண்டு கூறினார்.
அருகிலிருந்த நபித்தோழர்கள் கஅபை தண்டிக்க விரைந்தனர். அதனை தடுத்த நபிகளார், ‘கஅபை விட்டு விடுங்கள், அவரை நான் மன்னித்து விட்டேன். அவர் முன்பு இருந்த கஅப் அல்ல இப்போது’ என்றார்கள்.
மன்னிப்பின் மகத்துவத்தையும் அதன் உயர்வையும் உணர்ந்து கொண்ட கஅப் மகிழ்ச்சி பொங்க, மன்னிப்பின் மாண்பை மையமாக கொண்டு கவிதை பாடினார். அதற்கு பரிசாக ஏமன் தேசத்து போர்வையை அண்ணலார் கஅபின் தோளில் போர்த்தினார்கள்.
மக்கா வெற்றியின் போது நபிகளார் பிரகடனப்படுத்திய மன்னிப்பு என்பது உலக வரலாற்றில் என்றுமே நிலையான இடத்தைப் பெற்றுவிட்டது. பழிக்கு பழி என்பது மாற்றப்பட்டு பகைவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட நாள் அது.
மன்னிப்பின் மேன்மை குறித்து அருள்மறை திருக்குர்ஆனும் (41:34,35) இவ்வாறு பேசுகின்றது:
‘நன்மையும், தீமையும் சமமாக மாட்டா, (நபியே) மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையை தடுப்பீராக. அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கள் கூட (உமது) உற்ற நண்பராக மாறிவிடுவதை காண்பீர்’.
‘பொறுமையை கைக்கொள்வோரை தவிர வேறு எவருக்கும் இந்த குணம் வாய்க்கப் பெறுவதில்லை. மகத்தான பாக்கியமுடையவர்களை தவிர வேறு எவருக்கும் இந்த உயர்பேறு கிட்டுவதில்லை’.
அண்ணலாரை எதிர்த்து நின்ற பகைவர்களில் அபூஜஹ்லை போன்ற சிலருக்கு தான் இஸ்லாத்தில் இணையும் பாக்கியம் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால், அபூசுப்யான், காலித் இப்னு வலீத், அபூஜஹ்லின் மகன் இக்ரிமா போன்ற பெரும் பகைக்கொண்ட தலைவர்கள் பிற்காலங்களில் இஸ்லாத்தில் இணைந்து நபிகளாரின் உற்ற உயிர் தோழர்களாக மாறினார்கள். உலகில் இந்த நற்பேறு வேறு எவருக்கும் கிடைக்கவில்லை.
அனைவரிடமும் அன்பு காட்டுவதும், குற்றங்களை பொறுத்து மன்னிப்பதும், பகைவர்கள் இடர்படும்போது உதவுவதும், அண்ணலாரின் இயற்பண்புகளாகவே என்றும் மிளர்ந்தது. இறைவன் அருளால் அதுவே அவர்களின் அழியாத புகழுக்கு அச்சாரமாகவும் அமைந்தது.
நம் வாழ்வில் ஏற்படும் சின்னச்சின்ன பிரச்சினைகளைக் கூட நம்மால் மன்னிக்க முடியாதபோது, அதுவே பெரும் பகையாகி பின்னர் வாழ்நாளின் நெடும் பகையாகவே மாறிவிடுகிறது. எனவே அத்தகைய மனப்போக்கு மாறி, நபிகளாரின் வழிநின்று தாராளமாக மன்னிக்கப் பழகும் போது தான் மகிழ்ச்சியை உணர்ந்து நிம்மதியை பெற முடியும். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரிவானாக, ஆமீன்.