இலங்கையில் நடந்த மிக மோசமான விமான விபத்து ஏற்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
1974ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி இதே போன்ற நாளில், நெதர்லாந்து நாட்டுக்கு சொந்தமான மார்டின் எயார் டிசி 8 என்ற விமானம் விபத்துக்குள்ளானது.
இந்தோனேசியாவின் சரபாயா விமான நிலையத்தில் இருந்து புனித மக்காவுக்கு யாத்திரீகர்களை ஏற்றிச் சென்றது.
விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட 191 பேர் பயணம் செய்தனர்.
அன்றைய தினம் இரவு 10.10 அளவில் விமானம் அக்கரப்பத்தனை, நோர்வூட் காசல்ரீ நிர்த்தேக்கத்திற்கு மேல் பறந்துக்கொண்டிருந்த போது நோர்வூட் பிரிஜ் காவல் பிரிவுக்கு உட்பட்ட டேபர்டன் தோட்டத்திற்கு மேல் உள்ள ஏழு கன்னிமார் மலையில் மோதியதில் பயணித்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விமானம் விபத்துக்குள்ளான போது அதில் 191 பேர் பயணித்தனர். இவர்களில் 190 பேர் மலையடிவாரத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.
விமானத்தில் பயணித்த பணிப்பெண் ஒருவருடைய சடலத்தை மாத்திரம் அவரது காதலன் இந்தோனேசியாவுக்கு எடுத்துச்சென்றதாக தெரவிக்கப்படுகிறது.
விமானத்தின் பகுதிகள் துண்டுகளாக உடைந்திருந்தன. விமானத்தில் இருந்த விழுந்த பெருந்தொகை பணத்தை பிரதேச மக்கள் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறே விபத்துக்கு காரணம் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.