திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றில் எண்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட ஆறு பேரை இம்மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச் .எம். ஹம்ஸ இன்று உத்தரவிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புல்மோட்டை பகுதியிலுள்ள காட்வெயார் கடையொன்றில் வேலை செய்த நால்வரும், கடையின் வாகன சாரதிகள் இருவருமாக ஆறு பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் 43,23,35,30, மற்றும் 20 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் சீமேந்து பைக்கற்றுகள், மின் குமிழ் வகைகள், முள்ளுக் கம்பிகள், பற்றரிகள், எண்ணெய்வகைகள், தகரம் மற்றும் மின் விசிரி வகைகள் என எண்பது இலட்சம் ரூபா பெருமதியான பொருட்களை கொள்ளையிட்டு கடைகளுக்கு விற்பனை செய்துள்ளதாக விசாரனைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.