பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசியல் லாபத்துக்காக சிலர் இவ்வாறான வதந்திகளை பரப்பிவருகின்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கெக்கிராவ கல்வி வலயத்தில் கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் சிலருக்கு அவர்களின் பர்தா காரணமாக பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதிக்கவில்லை என சமூகவலைத்தளங்களில் பரவிவரும் செய்தி தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த செய்தி கேள்விப்பட்டதுடன், பரீட்சைகள் ஆணையாளருடன் தொடர்புகொண்டு நிலைமையை சரிசெய்யுமாறு தான் தெரிவித்ததாகவும் அவர் குறிபிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் ஆணையாளர் பரீட்சை மத்திய நிலைய பொறுப்பதிகாரியுடனும் கெக்கிராவ வலய பணிப்பாளருடனும் தொலைபேசியில் இதுதொடர்பாக வினவியபோது,
அவ்வாறான எந்த சம்பவமும் அங்கு இடம்பெறவில்லை என்றும் , இம்முறை பரீட்சைக்கு தோற்றியுள்ள தமிழ், சிங்கள,முஸ்லிம் அனைத்து மாணவர்களும் எந்த தடங்களும் இன்றி பரீட்சைக்கு தோற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் யாருக்கும் பரீட்சை நிலையங்களுக்குள் நெருக்கடிகள், தடங்கல், அச்சுறுத்தல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் இவ்வாறான தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பொய் தகவல்களை தெரிவிப்பது குறுகிய அரசியல் லாபத்துக்காக, மேற்கொள்ளும் முயற்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் மக்கள் இவ்வாறான பொய் பிரசாரங்களை நிராகரிப்பார்கள் எனவும் கூறிய அமைச்சர் , நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கல்விப்பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என அச்சப்பட்டபோதும் மாணவர்கள் எந்த பாதிப்பும் இன்றி இதுவரை பரீட்சைக்கு தோற்றிவருகின்றதாகவும் கூறியுள்ளார்.