யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் ஸ்ரீலங்கா கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச செயலாளர் அம்பலவாணர் சோதிநாதனினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் வடக்கில் முதல் முறையாக தனியார் காணியொன்று சுவீகரிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்பிரகாரம் ஸ்ரீலங்கா கடற்படையின் கோட்டையம்பர படைப்பிரிவின் பிரதான முகாம் அமைப்பதற்கு புங்குடுதீவிலுள்ள 14 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன.
14 நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு வேலைனைப் பிரதேச செயலாளரினால் காணி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமாரவேலு பொன்னம்மா, சின்னத்தம்பி இராசேந்திரன், சுப்பிரமணியம் மகேஸ்வரி, அண்ணாமலை கங்காசபை, ஐயம்பிள்ளை பாக்கியம், வேலாயுதபிள்ளை செல்லம்மா, கந்தையா தியாகராசா, இராசையா கோணேசலிங்கம், பஞ்சாசரம் தயாபரன், செல்வராசு அம்பிகா ஆகியோரின் காணிகளே சுவீகரிக்கப்படவுள்ளதாக வேலணை பிரதேச செயலாளரினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த மூன்று வருடங்களாக மண்கும்பானிலுள்ள தீவகத்தின் பிரதான கடற்படை முகாம் தளபதியும் புங்குடுதீவு வல்லன் கடற்படை முகாமின் பொறுப்பாளர்களாக கடமையாற்றியவர்களும் இந்தக் காணிகள் மற்றும் அருகிலுள்ள மலையடி நாச்சிமார் கோயிலையும் உள்ளடக்கி ஆக்கிரமிப்பதற்கு கடும் முயற்சிகளை எடுத்ததாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் காணி உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்ததாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீண்டும் இந்த காணியை சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.