சத்தீஸ்கரில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் இன்று ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்டத்தில் இந்தோ-திபெத் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான 45 ஆவது பட்டாலியன் கேத்னார் முகாம் உள்ளது எனவும் அந்த முகாமில் இன்று வீரர்களிடையே இடம்பெற்ற மோதலில் 5 படைவீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில், மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மோகித் கருத்துத் தெரிவிக்கையில்,
இராணுவ முகாமில் இருந்த இராணுவ வீரர்களில் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து கூடவிருந்த சகாக்களைச் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எனத் தெரிவித்திருந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்ததுடன், துப்பாக்கிச் சூடு நடத்திய வீரரும் பின்னர் சுட்டுக்கொல்லப் பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.