ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் உயிரைக் காப்பாற்றும் கருவியை வடிவமைத்து புதுச்சேரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர்.
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பாராட்டைப் பெற்ற அவர்கள், இக்கருவியை மேலும் மேம்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டனர். அவர்களுக்கு ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை ஆண்டுதோறும் மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டில் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியும் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மாநில அளவிலான கண்காட்சியும் நடந்தது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் போன்ற பகுதிகளில் இருந்து பல்வேறு மாணவர்கள் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்கள் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தினார்கள்.
மண்டல அளவில் நடைபெற்ற கண்காட்சியில் மொத்தம் 349 படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இதில் தேர்வு செய்யப்பட்ட 110 சிறந்த அறிவியல் படைப்புகள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்றன.
இக்கண்காட்சியில் திருக்கனூரைச் சேர்ந்த பிரைனி ப்ளூம்ஸ் சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர்கள் அரவிந்த், தமிழரசன் ஆகிய இருவரும் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் உயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது எனும் கருவியின் மாதிரியை வடிவமைத்து காட்சிப்படுத்தினர். இக்கண்டுபிடிப்பு மண்டல அளவில் முதல் பரிசும், மாநில அளவில் இரண்டாம் பரிசும் பெற்றது. இவர்களை கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பாராட்டியிருந்தார். இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் மாணவர்களைச் சந்தித்து அறிவியல் செயல்பாட்டைக் கேட்டறிந்து பாராட்டு தெரிவித்தார்.