வவுனியாவிற்கு இன்று அமைச்சர் வியஜம் மேற்கொண்டுள்ளார். அங்கு கருத்துத் தெரிவித்த அவர், இரண்டு கருங்கற்கள் கட்டப்பட்டு சமுத்திரத்தில் நான் தள்ளப்பட்டுள்ளேன். எனினும் நீந்தி கரையேறுவேன் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம், பழைய பேரூந்து நிலையம், புதிய பேரூந்து நிலையம், மரக்கரி மொத்த விற்பனை நிலையம் என்பவற்றிற்கு சென்று அங்கு பலரையும் சந்தித்ததன் பின்னர் வவுனியா வாடி வீட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பலரின் கேரிக்கைக்கு இணங்க நான் அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டிருந்தேன். இல்லாவிட்டால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிகளவான வாக்குகளை பெற்று அதிகளவான ஆசனங்களை பெற்றே அமைச்சு பதவியை எடுக்கும் நோக்கம் இருந்தது. எனினும் பலரின் கோரிக்கைக்கு அமைய தற்போது அமைச்சு பதவியை பெற்றிருக்கின்றேன். இது நாடுதழுவியதான அமைச்சாகவுள்ளது. என்னை சமுத்திரத்தில் தள்ளிவிட்டுள்ளது.
எனினும் நான் சமுத்திரத்தில் நீந்துவது என்று முடிவெடுத்து இருந்தாலும் இரு பக்கமும் இரு கருங்கற்கல் கட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்று தேசிய அமைச்சு என்ற கருங்கல் மறுபக்கம் தமிழர்களின் பிரச்சனைகள் என்ற கருங்கல். ஆகவே இந்த கருங்கற்களை கட்டிக் கொண்டே நான் இந்த சமுத்திரத்தில் நீந்த முடிவெடுத்துள்ளேன். எனக்கு கடந்த காலத்தில் சமுத்திரத்தில் நீந்திய அனுபவங்கள் நிறையவே இருக்கின்றது.
மக்கள் நலனை முன்னிறுத்துவதால் என்னால் நீந்த முடியும் என நம்புகின்றேன். எனினும் மக்களினுடைய பக்கபலம் அவசியமானது. ஆட்சியாளர்களுடன் கதைப்பதில் எனக்கு சில சங்கடங்கள் உள்ளது. ஏனென்றால் நான் வெல்லவில்லை. நான் எதிர்பார்த்தது போல் தமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. இதை சொல்வதற்கு நான் தயங்கவில்லை. எனவே வர இருக்கும் சந்தர்ப்பங்களை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் எமக்கு கிடைத்த வாக்குகளை விட எனக்கு கிடைத்த வாழ்த்துக்கள் பல மடங்கு அதிகமாகவுள்ளது. குறைந்தது அடுத்த 5 வருடங்களாவது இதே அரசாங்கம்தான் ஆட்சியில் இருக்கும். ஜே ஆர் ஜெயவர்த்தன யுத்தகாலத்தில் அந்த பிரச்சனைகளில் ஈடுபடவில்லையா? பிரேமதாசா யுத்தம் நடத்தும் போது அவர் ஈடுபடவில்லையா? சந்திரிக்கா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபடவில்லையா? யுத்தம் வந்தால் அது எங்கள் மீது திணிக்கப்பட்ட நிர்ப்பந்தம்.
71 ஆம் ஆண்டும் 89 ஆம் ஆண்டும் சிங்கள இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடும்போது பாதிக்கப்பட்டது அப்பாவி சிங்கள மக்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் புலித்தலைமைகள் வன்முறையை தொடர்ந்தமையால் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் மக்கள். சமீபத்தில் முஸ்லீம் மக்களின் பெயரால் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டபோது பாதிக்கப்பட்டது அப்பாவி முஸ்லீம் மக்கள்.
ஆகவே அரசாங்கத்திற்கு எதிராக வன்முறை தலைதூக்கும் போது இது நடப்பது தவிர்க்க முடியாதது. இது உலக வரலாறு. இதற்கு உலகில் எந்த நாடும் விதிவிலக்காக இருந்ததில்லை. ஆகவே நாங்கள் எங்களில் தவறுகளையும் குறைபாடுகளையும் வைத்துக்கொண்டு எங்கள் சுயலாப அரசியலுக்காக நாங்கள் எங்கள் மக்களை பலிகொடுத்துள்ளோம்.
செல்வநாயகம் ஐயா தன்னால் முடியாத போது கூறியிருந்தார் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் கடவுள்தான் வரவேண்டும் என. நானும் எனது இறுதிக்காலட்டத்தில் கூற விரும்புவது இதே போக்கில் தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவார்களாக இருந்தால் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாத நிலைமையே ஏற்படும் என தெரிவித்தார்.