தமிழச்சி ரோகிதாவின் சாதனையை உலகறியச் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும்.
எம்மை பெருமையடைய செய்யும் வகையில் வவுனியாவை சேர்ந்த மாணவி ரோகிதா சாதனை படைத்துள்ளார்.
வவுனியா, சைவபிரகாச மகளிர் கல்லூரியில் 12ம் ஆண்டில் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவி இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை நோயாளியிடமிருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDEL INJECTOR) கண்டுபிடித்து மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
மாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்கேற்பதற்காக பாடசாலை அதிபர் பி.கமலேஸ்வரியின் ஒத்துழைப்புடனும், பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப்பொருட்களின் ஊடாக ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக 2009 ஆம் ஆண்டு களமுனையில் தனது தந்தையை இழந்த இம்மாணவி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த போதிலும் விஞ்ஞான தொழில்நுட்ப பாடத்தினை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுவருகின்றார்.
இந்நிலையிலேயே மாகாண மட்ட போட்டியில் பங்கேற்க ஆர்வம் கொண்டு இக்கண்டுபிடிப்பில் ஈடுபட்ட போதிலும், போதியளவு நிதி வசதிகள் இல்லாமையினால் அதிபரினூடாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சிறு தொகை பணத்தினை பெற்று தனது முயற்சியை ஆரம்பித்திருந்தார்.
இதன்போது பாவணைக்கு உதவாத கழிவுப்பொருட்களை தனது கண்டுபிடிப்புகளுக்காக குறித்த மாணவி பயன்படுத்தியுள்ளார்.
அத்துடன் இந்த மாணவி குறித்த கண்டுபிடிப்பை மேலும் மெருகூட்டி அதனை அனைவரும் பயன்படுத்தும் விதமாக உருவாக்குதவற்கு சில பொருட்களை வெளிநாட்டில் இருந்து பெறவேண்டியுள்ளது. அதனை குறித்த மாணவி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் குறித்த கண்டுபிடிப்பை பதிவு செய்வதற்கும் முயற்சிள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தங்கை ரோகிதாவை போல இலைமறைகாயாக இருக்கும் எம்மவர் தேசத்தின் சிந்தனை திறன்மிக்க சாதனையாளர்களை தட்டிக் கொடுத்து அனைவரும் ஆதரவுக் கரம் நீட்டினால் இவர்கள் ஈழத் தமிழ் இனத்தின் பெருமையை உலக அளவில் எடுத்து செல்வார்கள் என்பதில் ஐயமேதுமில்லை.
இதனை வெறும் செய்தியாக மட்டும் பார்த்துவிட்டு சாதாரணமாக வாழ்த்து சொல்லிவிட்டு கடந்து செல்லும் விடயமாக பார்த்தால் குறித்த மாணவியிடம் உள்ள திறைமை மழுங்கடிக்கப்படும்.
ஆம்! யுத்த களமுனையில் தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் மிகுந்த பொருளாதார கஷ்டத்தின் மத்தியிலேயே கழிவு பொருட்களை கொண்டு இந்த சாதனையை படைத்துள்ளார்.
அவரது சாதனையை மெருகூட்டவேண்டும்… உலகறியச்செய்யவேண்டும்… அதற்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டியது உங்கள் ஒவ்வொருவரது கடமை.