நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடு இரவில், பேருந்து ஒன்றில் நிர்பயா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு வெளியில் வீசப்பட்டார். இதில், அந்த பெண்ணின் உடன் இருந்த நண்பர் கடுமையாக தாக்கப்பட்டு அவரையும் தூக்கி வீசியது 6பேர் கொண்ட கும்பல்.
அதில், பவன் குப்தா, முகேஷ் சிங், வினேய் சர்மா, ராம் சிங், அக்ஷய் தாக்கூர் ஆகியோருக்கு 2013ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
மேலும், ஒருவன் 18வயது நிரம்பாதவன் என்பதால் குறைந்த அளவு தண்டனையே (3ஆண்டுகள் சிறை) பெற்றான். குற்றம்சாட்டப்பட்ட 5பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்கள் தண்டனையை உச்சநீதிமன்றம் 2017ஆம் ஆண்டு உறுதி செய்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் ஒருவரான ராம் சிங் சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றவர்கள் தங்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அவர்களுக்கு எந்த நேரமும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலவும் சூழலில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளி வினய் ஷர்மாவின் கருணை மனுக்களை குடியரசுத்தலைவர் நிராகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.